Published : 02 Dec 2022 04:33 PM
Last Updated : 02 Dec 2022 04:33 PM

தமிழக அரசை கண்டித்து அதிமுக 3 நாட்களுக்கு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்: இபிஎஸ் அறிவிப்பு

இபிஎஸ் | கோப்புப் படம்

சென்னை: திமுக தலைமையிலான தமிழக அரசைக் கண்டித்து வரும் 9, 13 மற்றும் 14-ம் தேதிகளில் மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம்ஜிஆர் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அதிமுகவை தோற்றுவித்து, மகத்தான பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தினார். அவரது வழியிலே ஜெயலலிதா, மக்கள் பல்வேறு நிலைகளில் சிறந்து விளங்கிடவும், எவ்வித அச்சத்திற்கும் ஆளாகாமல் தங்கள் வாழ்க்கையை சிறப்புடன் நடத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தினார். அதேபோல், அதிமுக அரசிலும், பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்யப்பட்டது.

18 மாத கால ஆட்சியில்,சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வரும் திமுக அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், 9-ம் தேதி பேரூராட்சி, 13-ம் தேதி நகராட்சி, மாநகராட்சி, 14-ம் தேதி ஒன்றியங்களில் அதிமுக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் கழகங்களோடு இணைந்து, சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு, மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தலைமை ஏற்கும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.

திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பிடும் வகையில் நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மக்களை பல்வேறு வகைகளில் வாட்டி வதைக்கும் திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்களும் கலந்துகொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x