Published : 02 Dec 2022 06:02 PM
Last Updated : 02 Dec 2022 06:02 PM
புதுச்சேரி: திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தலைமை தாங்க முடியாது, புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக திமுகதான் உள்ளது என்று அக்கட்சியின் மாநில அமைப்பாளரும், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ்தான் தான் புதுச்சேரியில் முதன்மையான கட்சி என்றும், மதசார்பற்றக் கூட்டணி நடத்தும் போராட்டங்களுக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்கும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று கூறினார்.
இது குறித்து எதிர்கட்சி தலைவரும், திமுக அமைப்பாளருமான சிவா இன்று கூறியது: "காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்த நாராயணசாமி பேசியுள்ளார். எங்களை பொறுத்தவரை திமுக தலைமையின் முடிவுதான் எங்களின் கருத்து. எங்களுக்கு என தனி எண்ணம் கிடையாது. தமிழகத்தை போல புதுச்சேரியிலும் காங்கிரஸ் - திமுக உறவு நீடிக்கிறது. தமிழகத்தில் எங்கள் தலைமை அறிவிக்கும் போராட்டத்திற்கு புதுச்சேரியில் திமுகவே தலைமை ஏற்கும்.
தமிழகத்தில் திமுக தலைவர் அறிவிக்கும் போராட்டங்களை நாங்கள்தான் முன்னிலை எடுத்து நடத்துவோம். மற்ற போராட்டத்திற்கு நாங்கள் தலைமை ஏற்பதில்லை. போராட்டத்திற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புதுச்சேரி திமுக நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அரசுக்கு எதிராக மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களோடு சேர்ந்து சில கட்சிகள் வருவார்கள். எங்கள் கட்சி கொள்கை அடிப்படையில் நாங்கள் செயல்படுவோம்.
எங்கள் கட்சி கொள்கை சொல்லித்தான் நாங்கள் கட்சி வளர்க்க முடியும். திமுகவுக்கு காங்கிரஸ் கட்சி தலைமை தாங்க முடியாது. எதிர்க்கட்சியாக திமுக தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி, வேட்பாளர் குறித்தும் தலைவர் சொல்வார். கட்சி தலைமை எடுக்க முடிவு கட்டுப்படுவோம். எங்களுக்கு எந்த தனி சிந்தனையும் கிடையாது. காங்கிரஸ் - திமுக கூட்டணியில் காங்கிரஸ் சீட்டை பெற்றாலும் வெற்றி பெற செய்வோம்" என்று சிவா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT