Published : 02 Dec 2022 04:18 PM
Last Updated : 02 Dec 2022 04:18 PM

ஸ்டான்லி மருத்துவமனை லிஃப்டில் சிக்கிய சம்பவம் | யார் மீது தவறு? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 

செங்கல்பட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செங்கல்பட்டு: ஸ்டான்லி மருத்துவமனையில் லிஃப்ட் பழுதடைந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட அலுவலர்களின் தவறால் நடந்ததா அல்லது கடந்த ஆட்சியில் பெயர் தெரியாத நிறுவனத்திற்கு கான்ட்ராக்ட் கொடுத்ததால் நடந்ததா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்; இரண்டு பொதுப் பணித்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பொதுப் பணித்துறை அமைச்சரிடம் கூறியுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செங்கல்பட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் லிஃப்ட்டில் சிக்கிக் கொண்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கடந்த ஆட்சிக் காலத்தில், 8, 9 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட இந்த லிஃப்ட்களை, பாரத் லிஃப்ட் கம்பெனி என்ற ஒரு நிறுவனத்தினர் அமைத்துள்ளனர். அந்த வகையில்தான் ஸ்டான்லி மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்து லிஃப்ட் ஒரு 19 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டுள்ளது. அதாவது, 2003-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பொதுப் பணித் துறையைச் சேர்ந்த அலுவலர்களைச் சேர்ந்தது.

பொதுப் பணித் துறை அலுவலர்கள்தான் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தங்களைக் கொடுத்து, ஆண்டுதோறும் அதை சரியாக செய்கிறார்களா என்று கண்காணிப்பார்கள். இந்த லிஃப்ட்டில் நாங்கள் மாட்டிக்கொண்டு தப்பித்து வந்தது, பெரிய விஷயமல்ல. சாதாரண உடல்நிலையில் இருப்பவர்கள். நோயாளிகள் லிஃப்டில் செல்லும்போது பாதிக்கப்பட்டால், கடுமையான சூழல் உருவாகும்.

எனவேதான், பொதுப் பணித் துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட அலுவலர்களின் தவறால் நடந்ததா அல்லது கடந்த ஆட்சியில் பெயர் தெரியாத நிறுவனத்திற்கு கான்ட்ராக்ட் கொடுத்ததால் நடந்ததா என்பது குறித்து விசாரிக்க வேண்டும்; இரண்டு பொதுப் பணித் துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பொதுப் பணித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, கடந்த நவ.29-ம் தேதி, புதிய திட்டங்களைத் திறந்து வைப்பதற்காக சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்றிருந்தார். அப்போது மூன்றாவது தளத்தில் நடந்த நிகழ்ச்சி முடிந்து தரைத்தளத்திற்கு அமைச்சர் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, லிஃப்டில் ஏற்பட்ட பழுது காரணமாக பாதியில் நின்றது.

இதையடுத்து, ஆபத்து கால கதவு வழியாக, லிஃப்டினுள் சிக்கிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள், லிஃப்ட் ஆபரேட்டர்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தால், ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, லிஃப்டை பராமரிக்க வேண்டிய பொறியாளர்களின் கவனக் குறைவாலும், சரிவர பராமரிக்காததாலும் பாதியில் பழுதடைந்து நின்றுவிட்டதாக கூறி, இதற்கு பொறுப்பான உதவி செயற்பொறியாளர் டி.சசிந்தரன் மற்றும் உதவிப் பொறியாளர் கலைவாணி ஆகிய இருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பொதுப்பணித் துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x