Published : 02 Dec 2022 06:26 AM
Last Updated : 02 Dec 2022 06:26 AM

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநர் ரவியுடன் அமைச்சர் ரகுபதி சந்திப்பு

கோப்புப்படம்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தரும்படி ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் ரகுபதி நேற்று சந்தித்து வலியுறுத்தினார்

தமிழகத்தில் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பணத்தை இழந்ததுடன், தற்கொலை செய்வோர் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில், உயிரிழப்புகள் தொடரவே, ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முன்னாள் நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அறிக்கை அடிப்படையில், கடந்த அக்.1-ம் தேதி ஆன்லைன் ரம்மி தடை தொடர்பான அவசரச் சட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவர் அன்றே ஒப்புதல் அளித்த நிலையில், அவசரச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

பின்னர், அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், கடந்த அக்.19-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில், நிரந்தர சட்டமாக தமிழ்நாடு ஆன்லைன் ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்.28-ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த மசோதாவில் சில கேள்விகளை எழுப்பி, தமிழக அரசிடம் ஆளுநர் விளக்கம் கோரினார். கடிதம் வந்த 24 மணி நேரத்தில் நவ.25-ம் தேதி தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதைத்தொடர்ந்தும் ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை, சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, உள்துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, சட்டத்துறை செயலர் உள்ளிட்டவர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது, அவசரச் சட்டம் கடந்த நவ.27-ம் தேதியுடன் காலாவதியான நிலையில், சட்ட மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:

ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு இன்றும் விளக்கம் அளித்துள்ளோம். மசோதா தனது பரிசீலனையில் இருப்பதாகவும், விரைந்து தனது முடிவை தருவதாகவும் முதல்வரிடம் தெரிவிக்கும்படி ஆளுநர் கூறியுள்ளார். இந்த ஆன்லைன் ரம்மி காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆளுநரிடம் 21 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற காலநிர்ணயம் இல்லை என்பதால், அதை நாம் கேட்கவும் முடியாது. ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தவுடன் உடனடியாக அமலுக்கு வரும்.சட்டத்தின் மீதான சில சந்தேகங்களுக்கு தெளிவு பெற்றபின் ஒப்புதல் தருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x