Published : 29 Dec 2016 11:33 AM
Last Updated : 29 Dec 2016 11:33 AM

நொய்யல் இன்று 16: 10 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் ஓணம்புழா - மண் வாய்க்கால் திட்டம்

பொங்கி அழித்த காட்டாற்றின் பயணம்...

*

நீரின் முக்கியத்துவத்தை ஆட்சியாளர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் உணரவில்லை. இதனால் சிறு நீரோடை திட்டங்கள்கூட முடங்கிக் கிடக்கின்றன என்கிறார்கள் நீராதார மேம்பாட்டில் அக்கறையுள்ள அரசு அலுவலர்கள். அதற்கு உதாரணம் ஓணம்புழா-மண் வாய்க்கால் திட்டம் என்றும் வேதனை தெரிவிக்கிறார்கள். அது என்ன ஓணம்புழா-மண் வாய்க்கால்? நொய்யலின் முக்கிய நீரோடைகளில் ஒன்றான முண்டந்துறை தடுப்பணைக்கு நீரைக் கொண்டுவருவது கல்கொத்தி வாய்க்கால். அந்த நீரோடைக்காக மாவட்ட நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்ட கருத்துருதான் ஓணம்புழா-மண்வாய்க்கால் திட்டம்.

நொய்யல் நீரோடை தொடர்பாக 2004-ல் தமிழக-கேரள அதிகாரிகளிடையே மோதல் சூழல் ஏற்பட்டது. 2006 ஜூலை 27-ம் தேதி அப்போதைய கோவை தெற்கு வட்டாட்சியர் தலைமையில், பொதுப்பணி, வருவாய், வனம், நிலஅளவைத் துறை அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

20-ல் ஒரு பங்குதான்…

கல்கொத்தியில் தடுப்பு அமைக்காத நிலையிலேயே கேரளத்துக்குச் செல்லும் நீரில் 20-ல் ஒரு பங்குதான் தமிழகப் பகுதிக்கு வந்துகொண்டிருந்தது தெரியவந்தது. அதேசமயம், கற்கள், பாறைகள் வைத்து தடுக்கப்பட்டால், முற்றிலும் தண்ணீரே வராது.

மேலும், மழைக்காலங்களில்கூட தண்ணீர் தமிழகத்துக்கு வரும் வழி, கேரள பகுதிக்கு சரிவாக உள்ள மண் வாய்க்கால் பகுதியிலேயே 2 கிலோமீட்டர் தூரம் கடந்துவருகிறது. இந்த மண் வாய்க்காலில் விலங்குகள் அல்லது மனிதர்கள் நடந்து சென்றால், மண் சரிவு ஏற்பட்டு இவ்வழியே வரும் தண்ணீரும் தமிழகத்தின் முண்டந்துறை தடுப்பணைக்கு வராமல், கேரள பகுதிக்கு சென்றுவிடும் அபாயமும் உள்ளது என்று ஆய்வில் தெரியவந்தது.

“கல்கொத்தி வாய்க்காலில் தமிழகப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கற்களை வைத்து தடுப்பதும், அதை கேரள அதிகாரிகள் நீக்கிவிட்டுச் செல்வதும் தொடர்ந்தது. இது, 2 மாநில அதிகாரிகளும், இரு அரசுகளின் சம்மதத்தோடு பேசவேண்டிய விஷயம். அதனால் நமக்கு பெரிதாக பயனுமில்லை. எனினும், கல்கொத்தி வாய்க்கால் தமிழகத்துக்கு வரும் 2 கிலோமீட்டர் தொலைவையும் பாதுகாப்பது முக்கியம். அதற்காக தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டும்” என்று வலியுறுத்தும் ஆய்வறிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைத்திருக்கிறார்கள் ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள். அது அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

10 ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை

“கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்த ஆய்வறிக்கைவின் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. அந்த திட்டம் நிறைவேறியிருந்தால், கல்கொத்தி வாய்க்காலில் தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய நீர் முழுமையாகவும், நிரந்தரமாகவும் கிடைக்க வழி ஏற்பட்டிருக்கும்” என்று அப்போது ஆய்வில் ஈடுபட்ட அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கோவை தெற்கு வட்ட முன்னாள் வட்டாட்சியர் வி.சுப்பிரமணியம் ‘தி இந்து’விடம் கூறியது: ஆலாந்துறை மத்வராயபுரத்துக்கு தெற்கு மலைப்பகுதியில் செல்லும் இந்த காட்டாற்றை கேரள மக்கள் ‘ஓணம்புழா’ என்று அழைக்கிறார்கள். தமிழக வன எல்லையில் கோவை குற்றாலத்துக்கு அப்பால் உள்ள கல்கொத்திப்பதி (காலி செய்யப்பட்ட பழங்குடி கிராமம்) மற்றும் மொட்டைப்பாறை வழியாக மலைக்காடுகளை ஊடுருவி 8 கிலோமீட்டர் மேற்கு நோக்கிச் சென்றால் பெரிய ஆட்டுமலை, சிறிய ஆட்டுமலை என்ற 2 மலைச்சிகரங்கள் உள்ளன.

கடல் மட்டத்திலிருந்து 1,840 மீட்டர் மற்றும் 1,687 மீட்டர் உயரம் கொண்ட இந்த 2 மலைகளில் பெய்யும் மழைநீரால் ஊற்று உருவாகி, ஓடையாக மாறி தமிழக எல்லைக்குள் வருகிறது. இந்த இடத்திலேயே ஓணம்புழா நீர்வீழ்ச்சி உள்ளது. சிகரங்களிலிருந்து வரும் நீர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்து, தெற்கு நோக்கி திரும்பி பெரும்பள்ளத்தில் விழுந்து கேரள எல்லைக்குள் செல்கிறது.

இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் வடக்கு நோக்கிச் செல்லும் வகையில் உள்ளது கல்வாய்க்கால். இது அக்காலத்தில் கற்களை கொத்தி ஏற்படுத்தப்பட்ட வாய்க்கால் அல்லது இயற்கையாகவே அமைந்த வாய்க்கால் என்று இருவேறுவிதமாக கருதப்படுகிறது.

இதன் மூலம்தான் மத்வராயபுரத்தில் உள்ள முண்டந்துறைக்கு தண்ணீர் வருகிறது. கல்வாய்க்காலில் தண்ணீர் வரும் இடத்தில்தான் ஒரு மீட்டர் உயரத்துக்கு கல்வைத்து கேரள அதிகாரிகள் அடைத்துவிட்டனர். கல்வாய்க்காலுக்கு ஓனம்புழா நீர்வீழ்ச்சி தண்ணீர் மட்டுமின்றி, வேறு திசைகளில் உருவாகும் சிறிய ஓடைகளிலிருந்தும் தண்ணீர் வருகிறது. ஆனால் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் வரும்.

அவ்வாறு வரும் நீர் கல்வாய்க்காலில் விழுந்து, தொடர்ந்து மண்வாய்க்காலுக்குச் செல்கிறது. இது 2 கிலோமீட்டர் தொலைவுக்கு, கேரள மலைச்சரிவின் ஓரமாகவே செல்கிறது. இந்த வாய்க்கால் மண் அடிக்கடி சரிந்து விடுகிறது. அப்படி உடைப்பு ஏற்பட்டால் முண்டந்துறைக்கு கொஞ்சம்கூட தண்ணீர் வருவதில்லை.

தமிழக அதிகாரிகள் இதை தடுத்து தமிழகப் பகுதிக்குள் தண்ணீரை திருப்பி விடுவதும், கேரள அதிகாரிகள் தடுப்பை உடைப்பதும் 2004 முதல் 2006 வரை தொடர்கதையாக நீண்டது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டுமென தமிழக அரசுக்கு, மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்தது.

அதிகாரிகள் ஆய்வு

கோவை-பாலக்காடு ஆட்சியர்கள் கூட்டாக ஆய்வு செய்து, அதன் விவரங்களை அரசுக்குத் தெரிவிக்குமாறு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. மேலும், கல்கொத்தியின் அப்போதைய நிலை குறித்து ஆய்வுசெய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கோவை மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில்தான் பல்வேறு துறை அதிகாரிகளும் கல்வாய்க்கால், மண்வாய்க்காலை ஆய்வு செய்து, அறிக்கை அளித்தோம். நாங்கள் சென்றபோதுகூட மண்வாய்க்கால் உடைத்துவிடப்பட்டும், கல்கொத்தி வாய்க்காலில் கற்கள் வைத்து தடுக்கப்பட்டும் இருப்பதைக் கண்டோம். அதை சரிப்படுத்தி விட்டு வந்த தகவலையும் அரசுக்குத் தெரிவித்தோம்.

அங்கே எப்போதும் கேரள வனத் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தமிழகப் பகுதியில் கண்காணிப்பே கிடையாது. பழங்குடி மக்கள் துணையின்றி அப்பகுதிக்கு செல்ல முடியாத நிலையே நீடிக்கிறது.

இதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படவும், மண்வாய்க்காலின் கேரளப் பகுதி சரிவைச் சீரமைக்கும் வகையிலும் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு கான்கிரீட் தடுப்பு அமைக்க வேண்டும். அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

கல்வாய்க்காலில் விநாடிக்கு 1.5 கனஅடி நீர் வருகிறது. கேரளா தடை செய்யாமல் தண்ணீர் வந்தால்கூட, அவர்களுக்குச் செல்லும் நீரில் 20-ல் ஒரு பங்குதான் தமிழகத்துக்கு வரும். மண்வாய்க்காலை சரிசெய்யாவிட்டால் நமக்கு ஒரு சொட்டுத்தண்ணீர்கூட கிடைக்காது என்பதையும் தெளிவுபடுத்தி இருந்தோம். ஆனால் நடவடிக்கைதான் இல்லை என்றார்.

பயணிக்கும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x