Published : 02 Dec 2022 07:16 AM
Last Updated : 02 Dec 2022 07:16 AM
சென்னை: கிழக்குப் பிராந்திய கடலோர காவல்படையில் அதிநவீன இலகு ரக எம்கே-3 என்ற ஹெலிகாப்டர் இணைக்கப்பட்ட 840 என்ற படைப் பிரிவை இந்திய கடலோர காவல்படை இயக்குநர் ஜெனரல் வி.எஸ்.பதானியா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
‘ஆத்ம நிர்பார்’ திட்டத்தின்கீழ், இந்திய ஏரோநாட்டிக்கல் நிறுவனம் சார்பில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரில் அதிநவீன ரேடார் கருவிகள், எக்ட்ரோ ஆப்டிக்கல் சென்சார் கருவிகள், அதிக திறன் கொண்டதேடுதல் விளக்கு, அதிநவீனதகவல் தொடர்பு சாதனங் கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர் கடல் பகுதியில் கண்காணிப்பு ரோந்துப் பணி, மீட்புப் பணி, கடத்தல் தடுப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படும்.
இந்திய கடலோர காவல் படையில், 16 எம்கே-3 ரக ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், 4 ஹெலிகாப்டர்கள் சென்னையில் பணியில் ஈடுபடுத்தப் படும். இந்திய கடலோர காவல்படையின் 840 படைப் பிரிவு கமாண்டன்ட் அதுல் அகர்வால் தலைமையில் 10 அதிகாரிகளும், 52 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இப்படைப் பிரிவு தமிழகம் மற்றும் ஆந்திர கடல் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT