Published : 02 Dec 2022 07:50 AM
Last Updated : 02 Dec 2022 07:50 AM

கோயில் பெயரில் வலைதளம் நடத்த வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்படும்: உயர் நீதிமன்றம் அறிவிப்பு

மதுரை: தமிழகத்தில் கோயில் பெயர்களில் வலைதளங்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், மார்க்கண்டன் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக கோயில்களுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயில் அலுவலகத்தில் நேரடியாக நன்கொடை செலுத்துகின்றனர். வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் வசிப்போர் ஆன்லைன் வழியாக நன்கொடை செலுத்துகின்றனர்.

இதையறிந்த தனி நபர்கள் பலர், கோயில் பெயர்களில் வலைதளம் தொடங்கி பக்தர்களிடம் நன்கொடை வசூலித்து மோசடியில் ஈடுபடுவது தற்போது அதிகரித்துள்ளது. சென்னை கபாலீஸ்வரர் கோயில், பழநி முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயிலில் திருமணங்களும், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அறுபதாம் கல்யாணமும் நடைபெறும். இந்தத் திருமணங்களுக்கு ஏற்பாடு செய்து தருவதாக தனி நபர்கள் வலைதளம் வழியாக பக்தர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்கின்றனர்.

வடபழனி முருகன் கோயில்,பார்த்தசாரதி கோயில், திருச்சிரங்கம் கோயில், வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில்கள் பெயரில் வலைதளங்கள் தொடங்கப்பட்டு பக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, போலி வலைதளங்களை முடக்கவும், அவற்றை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கோயிலுக்கு தொடர்பில்லாத நபர்கள் கோயில் பெயரில் வலைதளம் நடத்துவதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீதிபதிகள், கோயில் பெயர்களில் வலைதளங்கள் செயல்படுவது தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் பிறப்பிக்கும் என்று குறிப்பிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x