Published : 02 Dec 2022 06:19 AM
Last Updated : 02 Dec 2022 06:19 AM
சென்னை: ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டங்களில் ரூ.560.30 கோடியில் புதியகூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த நிர்வாக அனுமதியளித்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 136 கிராம ஊராட்சிகளில் உள்ள 363ஊரகக் குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் திட்டம் செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினமும் ஒரு நபருக்கு 55 லிட்டர் வீதம், மொத்தம் 16.57 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், தாமிரபரணி நீராதாரத்தைக் கொண்டு, நீர் எடுப்பு கிணறு மூலம் தண்ணீர் எடுத்து, சேதுராமலிங்கபுரத்தில் நிறுவப்பட உள்ளசுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்.
இந்த திட்டம் மூலம் 3.05 லட்சம்பேர் பயன் பெறுவதுடன், புதிதாக92,407 குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செறுக்கனூர், தாடூர், எஸ்.அக்ரஹாரம், கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம் கிராமஊராட்சிகளுக்கும், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டஆர்.கே.பேட்டை, வாங்கனூர், ஜிசிஎஸ் கண்டிகை மற்றும் எஸ்விஜிபுரம் ஆகிய 9 ஊராட்சிகளில் அடங்கிய 115 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்குத் தேவையான நீரை,கொசஸ்தலையாற்றை நீராதாரமாகக் கொண்டு, 6 உறிஞ்சு கிணறுகள் மூலம் தினமும் 2.76 மில்லியன் தண்ணீர் எடுக்கப்பட்டு, குடியிருப்புகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் 42 ஆயிரம் பேர் பயன்பெறுவதுடன், 255 புதிய குடிநீர்க்குழாய் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டங்களுக்கான மொத்த மதிப்பீட்டுத் தொகைரூ.560.30 கோடி. இந்த திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT