Published : 02 Dec 2022 12:25 AM
Last Updated : 02 Dec 2022 12:25 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் காவல்துறை செய்து வருகிறது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. டிசம்பர் 6-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு, வியாழன் அன்று மாலை ஆய்வு செய்தார். விஐபிக்கள் மற்றும் விவிஐபிக்கள் வந்து செல்லும் வழித்தடம், அவர்கள் அமரும் இடங்கள், அவர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும், பாஸ் வைத்துள்ளவர்களை அனுமதித்தல் மற்றும் வெளியே செல்லும் பாதை குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கரோனா தொற்று பரவல் காரணமாக 2020 ம மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கார்த்திகைத் தீபத் திருவிழா பக்தர்கள் வரவில்லை. இதனால், இந்தாண்டு, டிசம்பர் 6-ம் தேதி நடைபெற உள்ள கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். 2,700 பேருந்துகள், 12 ஆயிரம் கார் உள்ளிட்ட வாகனங்கள் வரக்கூடும். சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. நான்கு பிரதான சாலைகள் வழியாக வாகனங்களை நிறுத்த, 52 இடங்கள் தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்களை தணிக்கை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளன.
ஐஜி கண்ணன் தலைமையில் 4 டிஐஜிக்கள், 27 எஸ்பிக்கள் உட்பட 12 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குற்ற தடுப்பு காவல்துறையினர் பணியை தொடங்கி உள்ளனர். சந்தேகிக்கும் நபர்களை கைது செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பாக, வெளிநாடு உட்பட பிற இடங்களில் இருந்து வந்தவர்கள் உட்பட 2 ஆயிரம் பேரின் முழு விவரங்கள் சேகரித்துள்ளோம். பாஸ் வைத்துள்ள பக்தர்கள் தங்கு தடையின்றி கோயில் உள்ளே வந்து சுவாமி தரிசனம் செய்யவும், மகா தீபத்தை பார்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
அனுமதி இல்லாதவர்கள், அங்கீகாரம் இல்லாதவர்கள் வருவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து துறைகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன. அமைதியாகவும், பாதுகாப்பாகவும் விழாவை நடைபெறுவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் காவல்துறை செய்து வருகிறது.
பரணி தீபம் மற்றும் மகா தீபத்துக்கு, கோயில் உள்ளே ஏற்கெனவே ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில், இந்தாண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோயில் உள்ளே குறிப்பிட இடம்தான் உள்ளன. இது தொடர்பாக ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை முடிவெடுக்கும்.
ஆன்லைனில் பதிவு செய்தவர்கள், பாஸ் வைத்துள்ளவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோயில் உள்ளே தேவையின் அடிப்படையில் மட்டுமே, பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். அவசர தேவைக்கு மட்டும், மாட வீதி உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறை வாகனம் இயக்கப்படும். காவலர்களை ஏற்றி வரும் வாகனங்கள், பார்க்கிங் இடத்தில் நிறுத்தி வைக்கப்படும். டிசம்பர் 9-ம் தேதி வரை காவல்துறையின் பாதுகாப்பு தொடரும்” என்றார்.
முன்னதாக, மாவட்ட எல்லைகளில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஐஜி கண்ணன், டிஐஜி சத்தியபிரியா, ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment