Published : 01 Dec 2022 07:16 PM
Last Updated : 01 Dec 2022 07:16 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் மதசார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் 45 அடி சாலையில் உள்ள தனியார் ஹாலில் இன்று நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியலிங்கம் எம்பி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ''பாஜக அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் விற்கப்பட்டு வருகிறது. விவசாயிகள், மக்கள், மாணவர்கள் எப்படி வாழ்கின்றனர், மக்கள் பிரச்சினைகள் என்ன என்பதை புரிந்துகொண்டு மோடி அரசை தூக்கி எரியவே ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
2024-ம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமராக ஆக்குவதுதான் நமது இலக்கு. புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு புதிய திட்டங்களை எதையும் உருவாக்கவில்லை. காங்கிரஸ் கொண்டு வந்த திட்டங்களை வைத்துதான் ஆட்சி செய்து வருகின்றனர். தற்போது புதுச்சேரிக்கு ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக சூப்பர் முதல்வர் சட்டபபேரவைத் தலைவர் செல்வம் கூறியுள்ளார். ஆனால் இது சம்பந்தமாக நிதித்துறையிலும், வெப்சைட்டிலும் தகவல் கிடையாது.
அமைச்சர் லட்சுமி நாராயணன் ரூ.2,450 கோடி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைப்பது மாநில அந்தஸ்துக்காக தான் என்று முதல்வர் ரங்கசாமி தேர்தலின்போது கூறியிருந்தார். ஆனால், மத்திய அரசு நிராகரித்துள்ளது. இருப்பினும் முதல்வர் ரங்கசாமி மக்களை பற்றி கவலைப்படாமல் கூட்டணியில் இருந்தால் போதும்... பதவி, அதிகாரம் மட்டும் போதும் என்று இருந்து வருகிறார். அவரால் தன்னிச்சையாக ஒரு முடிவும் எடுக்க முடியாது.
நமச்சிவாயம் கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்கப்படும் என்று கூறினார். ஆனால் தனியாருக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அமைச்சர்கள் அனைவரும் பினாமி பெயரில் சொத்து வாங்கி வருகின்றனர். பணம் இல்லையென்றால் வேலை எதுவும் நடக்காது. இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொரு துறையாக சென்று அதில் நடக்கும் ஊழல்களையும், முறைக்கேடுகளையும் கண்டறிந்து மாதந்தோறும் போராட்டம் நடத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சி தனிப்பட்ட முறையில் போராட்டம் நடத்த வேண்டும். மற்ற கட்சிகள் வந்தாலும், வராவிட்டாலும் பராவாயில்லை. எப்போதும் மதசார்பற்ற கூட்டணி என்றாலே காங்கிரஸ் தலைமையில்தான் இருக்கும். கொடி பிடிக்கவும், கோஷம் போடவும் மட்டும் நாம் இல்லை. ஒவ்வொரு துறையாக சென்று போராட்டம் நடத்தப்படும்'' என்றார்.
இதற்கிடையே கூட்டத்தில் தலைவர்கள் மட்டும் தொடர்ந்து பேசி வந்த நிலையில், சில நிர்வாகிகள் எழுந்து இங்கு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் என்று கூறிவிட்டு தலைவர்கள் மட்டும் பேசுவது நியாயமல்ல. நிர்வாகிகள் பேச அனுமதி வழங்க வேண்டும். ஆனால், வழங்கவில்லை என்று கூறி கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பிறகு நிர்வாகிகள் பேச அனுமதி வழங்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT