Published : 01 Dec 2022 01:06 PM
Last Updated : 01 Dec 2022 01:06 PM
கடலூர்: ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலந்துகொண்டு, ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும், ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.குமா "தமிழக அரசு ஆன்லைன் அவசரச் சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியபோது, உடனடியாக கையெழுத்திட்ட ஆளுநர், தற்போது அதை சட்டமாக்கும் வகையில், சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்து, அதனை ஆளுநருக்கு அனுப்பிவைத்து பல மாதங்களாகியும், அவசரச் சட்டம் காலாவதியாகும் போது, அதில் 24 சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டு அரசுக்கு திருப்பி அனுப்பிகிறார்.
சட்ட அமைச்சரும் அவரது கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில் பதில் அளித்து விட்டார். ஆனால் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. பெருவாரியான மக்கள் எதிர்பார்க்கக் கூடிய ஒரு சட்டத்திற்கு ஒப்புதல் பெற, அமைச்சர்கள் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டால் இல்லை என மறுக்கும் ஆளுநர் மாளிகை, பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டால் மட்டும் உடனடியாக அனுமதி அளிக்கிறது எப்படி?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மட்டுமல்ல தேர்ந்தெடுத்த 8 கோடி மக்களை அவதிக்கிறார் ஆளுநர். இரு நாட்களுக்கு முன்பு கூட தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆன்லைன் ரம்மி விளையாடி, தற்கொலை செய்துகண்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது. எனவே ஆளுநர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு மீதான தடைச் சட்ட மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT