Published : 01 Dec 2022 01:09 PM
Last Updated : 01 Dec 2022 01:09 PM

வழக்கு நிலுவை | மேகதாது அணைக்கு அனுமதி கோருவது சரியல்ல?: ராமதாஸ் கண்டனம்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதியளிக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குத் தேவையான அனுமதிகளை விரைவாக வழங்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது மத்திய அரசிடம் அனுமதி கோருவது கண்டிக்கத்தக்கது.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதிகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், அதையொட்டி அரசியல் லாபம் தேடும் நோக்குடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விடுத்துள்ள கோரிக்கை சட்டவிரோதமானது.

காவிரியில் அணை கட்ட கர்நாடக முதல்வர் அனுமதி கோரியிருப்பது அரசியல் நோக்கம் கொண்டது என்பதை உறுதி செய்ய ஏராளமான காரணங்கள் உள்ளன. முதலில் காவிரி ஆறு மாநிலங்களிடையே பாயும் ஆறு என்பதால், கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் அனுமதி இருந்தால் மட்டும் தான் கர்நாடக அரசால் அணை கட்ட முடியும். 2015ம் ஆண்டில் அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி பாமக மக்களவை உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு எழுதிய கடிதத்தில் உறுதி செய்திருக்கிறார். அதனால், தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக அரசு நினைத்துக் கூட பார்க்க முடியாது.

அடுத்தக்கட்டமாக 2018ம் ஆண்டில் சட்டவிரோதமாக பெறப்பட்ட அனுமதியை அடிப்படையாகக் கொண்டு விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ள கர்நாடக மாநில அரசு, அதற்கு காவிரி ஆணையத்தின் ஒப்புதலை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் தொடர் எதிர்ப்பு காரணமாக இது குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க முடியவில்லை. எனினும், ஒரு கட்டத்தில் தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக வழங்கிய யோசனைப்படி, காவிரி ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போதும் நிலுவையில் உள்ளது. விசாரணை முடியும் வரை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், காவிரி ஆணையக்
கூட்டத்தில் இனி எந்த காலத்திலும் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என ஆணையிட வேண்டும் என்று கோரி கடந்த 21ம் தேதி தமிழக அரசு மனுத் தாக்கல் செய்திருக்கிறது. எனவே, மத்திய அரசே நினைத்தாலும் மேகதாது அணைக்கு அனுமதி அளிக்க முடியாது. இத்தகைய சூழலில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு அனுமதி கோரியிருப்பது அரசியல் லாபம் தேடும் நாடகம் என்பதைத் தவிர வேறில்லை.

அதே நேரத்தில் கர்நாடகத்தை இப்போது ஆளும் கட்சி, அதன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மேகதாது அணையைத் தான் முக்கிய கருவியாக நம்பிக் கொண்டிருக்கிறது. அதனால், விதிமுறைகள், மரபுகள் ஆகியவற்றை புறந்தள்ளிவிட்டு, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக மத்திய அரசு எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். எத்தகைய நிலையிலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதியளிக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்த வேண்டும்." என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x