Published : 25 Dec 2016 02:41 PM
Last Updated : 25 Dec 2016 02:41 PM

நொய்யல் இன்று 14: நுரை பொங்கும் வாய்க்கால்; சாயக்கழிவால் கலங்கிய ஆறு

பரிதாப நிலையில் பூசாரிபாளையம், புட்டுவிக்கி பகுதிகள்

ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகில் வசிப்போர் மழை, வெள்ளம் வந்தால்தான் பயந்து, வீடுகளைக் காலி செய்துவிட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வர். ஆனால், கோவை மாநகரில் வாய்க்காலையொட்டி வசிக்கும் குடியிருப்புவாசிகள், அதில் பொங்கி வரும் நுரைகளைக் கண்டு அஞ்சுகின்றனர்.

நொய்யல் ஆற்றின் முதல் பாதிப்பு சாக்கடை, சாயக்கழிவுகள். அவை கோவை நகரம், திருப்பூரிலிருந்து வருவதாக பலர் கருதுகின்றனர். ஆனால், கோவை மாநகரின் தொடக்கமான பூசாரிபாளையத்துக்கு முன்னரே நுரைகள் பொங்கத் தொடங்கி விடுகிறது.

நொய்யலின் முதல் அணையான சித்திரைச் சாவடி வாய்க்காலிலிருந்து பிரியும் நீர், கோவை நகரில் உள்ள 7 குளங்களை நிரப்புகிறது. அதில், கிருஷ்ணம்பதி, செல்வம்பதி குளத்துக்கு இடையே இருந்த மதகு, தற்போது இருக்கும் இடமே தெரியவில்லை.

ஆனால், மதகு இருந்த இடத்தில் கட்டப்பட் டுள்ள பாலத்தில் வாகனப் போக்குவரத்து உள்ளது. இந்தப் பாலத்துக்கு கீழே செல்லும் வாய்க்கால், சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகளின் கழிவுநீரைச் சுமந்து சாக்கடையாக மாறிவிட்டது. மழைக் காலங்களில் நுரையுடன் பொங்கிப் பாய்கிறது.

அந்த சமயத்தில் காற்று வீசும்போது, 10, 20 மீட்டர் தொலைவுக்கு நுரை பறந்து செல்கிறது. சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள பலத்தின் மீது பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீதும் நுரை படர்கிறது. அதுமட்டுமின்றி, அருகில் உள்ள வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், தெருக்களிலும் நுரை பரவுகிறது. வீடுகளில் வைக்கப்பட்டுள்ள உணவு, தண்ணீர் என அனைத்திலும் நுரை மயம்தான்.

அரிப்பு, சொறியால் பாதிப்பு

“இந்த நுரை உடலில் பட்டால் உடனடியாக அரிப்பு எடுக்கிறது. சொறிந்தால் தடிப்பாகிறது. இந்த நுரை கலந்த நீரைக் குடித்து ஆடு, மாடுகள் இறக்கின்றன. இதைக் கண்டித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை” என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

மேலும், “இந்த வாய்க்கால் கடக்கும் பகுதிக்கு சற்றுத் தொலைவில்தான் மத்திய, மாநில அரசுகளின் வேளாண் ஆய்வு மையங்கள் உள்ளன. இவை வெளியிடும் கழிவுகள், வாய்க்காலில் கலக்கிறது. மேலும், மருதமலை, வடவள்ளி, பா.நா.புதூர் உள்ளிட்ட ஊர்களின் சாக்கடைகளும், அங்குள்ள தொழிற்சாலைக் கழிவுகளும் இந்த வாய்க்காலுக்குத்தான் வருகின்றன. இதனால்தான் நுரை பொங்கிவழிகிறது” என்றும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இங்கு ஆய்வு மேற்கொண்டு, “இப்பகுதியில் உள்ள சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் வாய்க்காலில் கலக்கின்றன. கரையோரங்களில் அவை படிந்துள்ளன. மழைக் காலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது, நுரை கிளம்பி விடுகிறது. அது வெறும் சோப்பு நுரையே தவிர, ரசாயனக் கழிவுகள் கிடையாது. இதனால், நோய்கள் வர வாய்ப்பில்லை” என்று விளக்கம் தருகின்றனர். எனினும், இப்பகுதி மக்களின் அவலம் தொடர்கிறது.

இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன் கூறும்போது, “இப்பகுதியில் உள்ள சோப்பு நிறுவனம் இயங்குகிறதா என்றே தெரியவில்லை. நீண்டகாலமாக பூட்டியே கிடக்கிறது. சோப்பு நுரையால் அரிப்பு எடுக்காது. நீர்நிலைகள் பாதிக்கப்படாது. இங்குள்ள வேளாண் ஆய்வு மையங்கள் வெளியிடும் கழிவில் பிரச்சினை என்று மக்கள் புகார் தெரிவிக்கும் போதெல்லாம், “நாங்கள் உள்ளேயே சுத்திகரிப்பு நிலையம் நிறுவி, கழிவை சுத்திகரித்துத்தான் வெளியிடுகிறோம்” என்கிறார்கள் அம்மையத்தினர். அவர்கள் சுத்திகரிப்பு நிலையம் வைத்திருப்பது உண்மை; அதை எப்போதும் இயக்குகிறார்களா? கழி நீரை சுத்திகரித்துத்தான் வெளியேற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியே?

நிலத்தடி நீர் பாதிப்பு

இங்குள்ள செல்வம்பதி, கிருஷ்ணம்பதி, முத்தண்ணன்குளம் பகுதிகளைச் சுற்றிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கெல்லாம் ஆழ்குழாய்க் கிணற்று நீர் நுரைத்து, மஞ்சள் மற்றும் நீல நிறத்திலேயே வருகிறது. அதை குடம், பிளாஸ்டிக், சிமென்ட் தொட்டிகளில் நிரப்பி வைத்தால், அவை கறுப்பாகி விடுகின்றன. குளங்களில் குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவது, அனைத்து குடியிருப்புகளின் சாக்கடைகளை விடுவது, நகரில் இடிக்கப்படும் பழைய கட்டிடக் கழிவுகளை கொட்டுவதும் தொடர்கிறது. இதனால் குளங்களைச் சுற்றியுள்ள 3 கிலோமீட்டர் தொலைவுக்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன் நிலத்தடி நீர் சுத்தமாக இருந்தது. இப்போது, கையில் தொடவே பயமாக உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி, மாசுக்கட்டுப்பாடு, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்துவிட்டோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. “கழிவுகளை விரைவில் பாதாள சாக்கடையில் விட்டுவிடுவோம். அது சுத்திகரிப்பு நிலையதுத்குக்கு சென்று விடும்” என்று 10 ஆண்டுகளுக்கு மேலாக சமாதானம் கூறுகின்றனர் அதிகாரிகள். இது நடக்குமா என்றுதான் தெரியவில்லை என்றார்.

இதேபோல, செல்வபுரம், தெலுங்குபாளையம் பகுதிகளின் நிலை இன்னமும் மோசமாக உள்ளது. தெலுங்குபாளையத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட சாய, சலவைப் பட்டறைகள் இயங்கிவந்தன. அவை வெளியேற்றும் சாயக்கழிவுகள் நேரடியாக நொய்யலாற்று வாய்க்காலில் கலந்தன. திருப்பூரில் சாய ஆலைகள் விவகாரம் விஸ்வரூபமெடுத்தபோது, இங்கும் பிரச்சினை கிளம்பியது. அப்போது பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முற்பட்டனர் சாய ஆலை உரிமையாளர்கள். அந்த முயற்சி முழுயைடையவில்லை. தொடர்ந்து இரவு நேரங்களில் சாயக்கழிவுகளை நேரடியாக நொய்யல் வாய்க்காலிலேயே விட்டுவந்தனர்.

இந்நிலையில், தெலுங்குபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையம் சரியாக இயங்கவில்லை என்று கூறி, அதில் உறுப்பினர்களாக இருந்த 41 சாய ஆலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன. ஆனாலும், இப்பகுதியில் தொடர்ந்து சாய, சலவைப் பட்டறைகள் இயங்குகின்றன. இரவு நேரங்களில் அலை வாய்க்காலில் கழிவுகளைக் கொட்டுகின்றன. இதனால் இரவு நேரங்களில் புட்டுவிக்கி சாலையில் ஓடும் நொய்யல் ஆற்றில் சாயம் கலந்த நீர், நுரையுடன் பொங்கிச் செல்கிறது.

சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் வரை நொய்யல் குறுக்கிடும் புட்டுவிக்கி தரைப்பாலத்தில் தினமும் இரவு முதல் அதிகாலை வரை சாயக் கழிவுநீர் பெருக்கெடுத்து செல்வதை தொடர்ந்து காணமுடிந்தது. இதைப் பார்த்த மக்களும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் தற்போது தரைப்பாலத்தை தகர்த்து, உயர்நிலைப் பாலம் கட்டியுள்ளனர். இதனால், கீழே பொங்கிச் செல்லும் சாய, சலவை ஆலைக் கழிவுகள் அவ்வழியே செல்வோருக்கு தெரிவதில்லை. இதனால், முன்பு போல பொதுமக்களிடமிருந்து அதிக புகார்கள் வருவதில்லை.

ஆனால், இந்தப் பகுதி மக்கள், ஆற்று நீரின் அசுத்தத்தால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கண் எரிச்சல், தோல் நோய்களால் அவதிப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். தெலுங்குபாளையத்தில் முன்புபோல இல்லா விட்டாலும், தற்போது 30-க்கும் மேற்பட்ட சாய, சலவைப் பட்டறைகள் இயங்கி வருகின்றன.

- பயணிக்கும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x