Published : 01 Dec 2022 06:21 AM
Last Updated : 01 Dec 2022 06:21 AM
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி நடைபயிற்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்தது. கோயில் யானைக்கு ஏராளமான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்த 5 வயது யானையை 1997-ல் தனியார் நிறுவனம் ஒன்று வாங்கி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு வழங்கியது. அப்போதைய முதல்வர், மணக்குள விநாயகர் கோயில் யானைக்கு ‘லட்சுமி’ என பெயர் சூட்டினார். அன்று முதல் யானை லட்சுமியை கோயில் நிர்வாகம் பராமரித்து வந்தது.
புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும், யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை. பல அதிகாரிகளும், பணிக்கு செல்வோரும் நாள்தோறும் லட்சுமியையும், விநாயகரையும் தரிசிப்பது வழக்கம்.
கடந்த சில வருடங்களாக யானை லட்சுமிக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. இதையடுத்து, வனத்துறை அறிவுறுத்தல்படி லட்சுமியை கோயில் நிர்வாகம் கவனித்து வந்தது. வேதபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் இருக்கும் கொட்டிலில், லட்சுமி யானை 15 நாட்கள் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டது. ஓய்வு காலத்தில் யானை லட்சுமி கோயிலுக்கு வரவில்லை.
யானையின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழ வகைகளை தவிர்த்து களி, பனை, தென்னை மட்டை, அரசமர இலை மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் வழங்கப்பட்டன. தமிழக வனத் துறை மருத்துவர்கள் பரிசோதித்த பின், யானை லட்சுமி கோயிலுக்கு திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தினமும் நடைபயிற்சி சென்று கோயிலுக்கு வரத்தொடங்கியது.
இந்நிலையில் நேற்று காலை ஈஸ்வரன் கோயிலில் இருந்து லட்சுமி யானை நடைபயணம் சென்றது. கல்வே கல்லூரி அருகே சென்றபோது மயங்கி விழுந்து, சிறிது நேரத்தில் அங்கேயே உயிரிழந்தது. யானை பாகன் சக்திவேல் மற்றும் அங்கிருந்தவர்கள் யானைக்கு முதலுதவி செய்தும் பலனில்லை. யானை லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கிருந்து, யானையை, மணக்குள விநாயகர் கோயிலுக்கு கிரேன் மூலம் தூக்கி வாகனத்தில் வைத்து எடுத்து வந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தனர். ஏராளமான பொதுமக்களும் அதிகாரிகளும் கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். பலர் இறுதி அஞ்சலி பேனர்கள் வைத்தனர்.
பின்னர், ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட லட்சுமி யானையின் உடல், உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகு, உருளையன்பேட்டை குண்டுசாலை மூங்கில் மாரியம்மன் கோயில் அருகே தோண்டப்பட்ட பள்ளத்தில் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு இரவு 8 மணியளவில் யானை லட்சுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT