Published : 01 Dec 2022 06:26 AM
Last Updated : 01 Dec 2022 06:26 AM

1 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.30,000 கோடியில் புதிய குடிநீர் திட்டங்கள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி: தமிழகத்தில் 1 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.30,000 கோடி செலவில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

திருச்சி மாவட்டம் ரெட்டிமாங்குடி கிராமத்தில் நேற்று புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, அவர் பேசியதாவது: மாநில அரசின் ரூ.8,500 கோடி, மத்திய அரசின் ரூ.8,000 கோடி என மொத்தம் ரூ.16,500 கோடியில் தமிழ்நாடு முழுவதும் கூட்டு குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவை தவிர, ஜெர்மன் வங்கி கடனுதவியுடன் மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

இதன்மூலம் நிகழாண்டில் ரூ.30,000 கோடி செலவில் 1 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய கூட்டு குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை கொண்டு செல்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் 540 இடங்களில் நீர் சேகரிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டு, 4.75 கோடி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.

அண்மையில் மழை பெய்தபோது, 500 டிஎம்சி-க்கு அதிகமான தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கடலில் சென்று கலந்தது. இதைத் தவிர்க்க, நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில், மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், நீரேற்று பாசனம் மூலம் குளங்களில் நீர் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.700 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x