Published : 30 Nov 2022 09:25 PM
Last Updated : 30 Nov 2022 09:25 PM
மதுரை: மதுரை உத்தங்குடி - கப்பலூர் வரையிலான சுற்றுச்சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டது. இதையொட்டி இச்சாலையில் மஸ்தான்பட்டி (வண்டியூர் சந்திப்பு அருகே), சிந்தாமணி, வலையங்குளம் ஆகிய 3 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
இருப்பினும், மதுரை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்பாட்டில் மேலூர் சாலையிலுள்ள சிட்டம்பட்டி, தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, திருமங்கலம் சாலையில் கப்பலூர் என 3 சுங்கச்சாவடிகளிலும் பல ஆண்டாக செயல்படுகின்றன.
சென்னையில் இருந்து விருதுநகர், நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களுக்கு போகும் வாகனங்கள் மதுரை மாவட்டத்தில் மட்டும் சிட்டம் பட்டி, மஸ்தான்பட்டி, சிந்தாமணி, வலையங்குளம், கப்பலூர் என 5 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்த வேண்டும்.
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் தேங்குவதால் போக்குவரத்து பாதிப்பதோடு, ஆம்புலன்ஸ் போன்ற அவசரமாக செல்லும் வாகனங்களும் போகுமிடத்திற்கு செல்ல முடியாமல் திணறுகின்றன. போதிய அடிப்படை வசதிகளும் இன்றி மஸ்தான்பட்டியில் இருந்து வலையங்குளம் வரை சுமார் 27 கிமீ. இடையில் செயல்படும் 3 சுங்கச்சாவடிகளுக்கும் தடை விதிக்க வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் உள்ளூர் மக்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிந்தாமணி, வலையங்குளம் தவிர, மாநில சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கழக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மஸ்தான்பட்டி சுங்கச்சாவடியில் மட்டும் கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு சில தினத்திற்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகளில் போதிய அடிப்படை வசதி, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டதாக சுங்கச்சாவடி நிர்வாகம் பதில் தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து நீதிமன்றமும் உத்தரவிட்டது.
இதனிடையே மஸ்தான்பட்டி சுங்கச்சாவடிக்கு எதிரான வழக்கு நிலுவையில் இல்லாத சூழலில் மீண்டும் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை சுங்கச்சாவடி நிர்வாகம் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அநேகமாக இன்று (நவ. 30) முதல் கூட அது தொடங்கும் என தெரிகிறது. இந்த சுங்கச்சாவடிக்கு மிக அருகிலுள்ள சிலைமான், விரகனூர், வண்டியூர், மஸ்தான்பட்டி, கருப்பாயூரணி, ஆன்டார் கொட்டாராம், இளமனூர், கல்மேடு, கருப்பபிள்ளையேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்துகின்றனர்.
உள்ளூர் வாகனங்கள் என்ற அடிப்படையில், கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கனவே கப்பலூர் சுங்கச் சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடர் போராட்டம் நீடிக்கும் நிலையில், தற்போது, மஸ்தான்பட்டி சுங்கச்சாவடியிலும் உள்ளூர் வாகனங்களுக்கான நிலை தெரியாமல் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். ஒரு வேளை கட்டணம் வசூலிப்பது உறுதியாகும் பட்சத்தில் போராட்டம் நடத்துவோம் என, அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இது குறித்து வண்டியூர் ஓட்டுநர்கள், பெற்றோர் கூறுகையில், ‘‘மஸ்தான்பட்டி அருகிலுள்ள இரு பள்ளிகள், கருப்பாயூரணி பகுதியிலுள்ள 3 பள்ளிக்கூடங்கள் மற்றும் விரகனூர் பகுதியிலுள்ள கல்வி நிலையங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுதல், பிற அலுவல்களுக்கென செல்லும்போது கட்டணம் செலுத்தும் சூழல் உருவாகும். குறிப்பிட்ட தூரம் வரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. இது குறித்த விளக்கத்தை சுங்கச்சாவடி நிர்வாகம் வெளியிட வேண்டும்’’ என்றனர்.
அதிகாரி தரப்பில் கூறுகையில், ‘‘வழக்கில் குறிப்பிட்ட படி, குறைகளை நிவர்த்தி செய்து விட்டோம். நீதிமன்றத்திலும் இது பற்றி தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்த நிலையில், தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் அதிலுள்ள விவரம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும். சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றுப் பகுதியிலுள்ள வாகனங்களுக்கு மஞ்சள் பாஸ் வழங்கப்படும். ஆவணங்களின்படி மாதத்திற்கு குறிப்பிட்ட கட்டணமாக வசூலிக்கும் திட்டம் உள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT