Published : 30 Nov 2022 03:09 PM
Last Updated : 30 Nov 2022 03:09 PM
சென்னை: தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக கே.சங்கர், ஆயுதப்படையின் கூடுதல் டிஜிபியாக எச்.எம்.ஜெயராம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக காவல் துறையில் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த பி.தாமரைக் கண்ணன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு பிரிவுபச்சார விழா டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்று, தாமரைக் கண்ணனின் சிறப்பான பணிகளை நினைவுகூர்ந்து பாராட்டினர்.
இந்நிலையில், உள்துறை செயலர் கே.பணீந்திர ரெட்டி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக காவல் துறை சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக, நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி கே.சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். காவல் தலைமையக கூடுதல் டிஜிபி ஜி.வெங்கடராமன், கூடுதலாக நிர்வாகப் பிரிவையும் சேர்த்து கவனிப்பார்.
ஊர்க்காவல் படை கூடுதல் டிஜிபி எச்.எம்.ஜெயராம், ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல, தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு, காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் பதவி உயர்வு பெற்று, கோயம்புத்தூர் வடக்கு சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியில் இருந்த என்.மதிவாணன், கோயம்புத்தூர் மாநகர போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாநகர போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக இருந்த டி.அசோக்குமார், சென்னை சைபர் குற்றப்பிரிவு (1) காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலோர பாதுகாப்புக் குழுமத்தின் நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வக்குமார், தமிழ்நாடு கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த பதவியில் இருந்தஜி.ராமர், தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமத்தின் நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT