Published : 30 Nov 2022 02:50 PM
Last Updated : 30 Nov 2022 02:50 PM

கள்ளக்குறிச்சி பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரை டிச.5-ல் இருந்து நேரடி வகுப்புகள்: உயர் நீதிமன்றம் அனுமதி 

சென்னை: கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் டிசம்பர் 5-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இசிஆர் சர்வதேச பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மரணம் அடைந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு எரித்தனர். இந்தக் கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்தப் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மாணவி மரணம் குறித்த புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனவே சம்பந்தப்பட்ட பள்ளியின் 'ஏ' பிளாக் கட்டிடம் விசாரணைக்கு தேவைப்படலாம்" என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் சிபிசிஐடி-யை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி, குறிப்பிட்ட அந்த கட்டிடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா என்பது குறித்தும், எப்போது புலன் விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்,

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி காவல்துறை தரப்பில், "விசாரணையை பெருமளவு முடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 3 மாதங்கள் தேவைப்படும். பள்ளியை திறக்க ஆட்சேபனை இல்லை. இரு பள்ளிகளையும் முழுமையாக திறப்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கலாம். மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தை மட்டும் பயன்படுத்தக்கூடாது" என்றும் தெரிவிக்கப்பட்டது.

லதா கல்வி அறக்கட்டளை தரப்பில், "இசிஆர் பள்ளி மற்றும் சக்தி பள்ளி அகியவற்றில் பள்ளி மூடப்பட்டதால் மாணவர்களின் எண்ணிக்கை 3500-ல் இருந்து 1500 ஆக குறைந்துள்ளது. 15 நாட்களில் அரையாண்டு தேர்வு நடக்க உள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதிக்க வேண்டும்" என்றும் வாதிடப்பட்டது.

மரணமடைந்த மாணவியின் பெற்றோர் தரப்பில், "அனுமதி பெறாமல் விடுதியை இயக்கிய பள்ளியை திறக்க அனுமதிக்கக் கூடாது" என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கறிஞர் எம்.எம்.ரவி என்பவர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளி, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் தரப்பில் பள்ளியை திறக்க ஒப்புதல் அளித்தாலும், சின்னஞ்சிறு மழலைகள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை நடத்த, சோதனை அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். இசிஆர் பள்ளி மற்றும் சக்தி பள்ளி ஆகியவற்றில் டிசம்பர் 5-ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை தொடங்கலாம்.

பள்ளியில் உள்ள 'ஏ' மற்றும் 'பி' பிளாக்குகளை பயன்படுத்தலாம். ஆனால், 'ஏ' பிளாக்கில் விடுதி இயங்கி வந்த 3-ஆவது மாடியை பயன்படுத்தக் கூடாது. விடுதி அமைந்துள்ள தளத்தை மாவட்ட நிர்வாகம் சீல் வைக்க வேண்டும். அனுமதி அளிப்பது குறித்தும் உரிய முடிவெடுக்க வேண்டும். கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்து பள்ளியுடன் ஆலோசித்து, அதற்கான தொகையை பெற்று காவல்துறை பாதுகாப்பு வழங்கலாம். , தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை வளாக பாதுகாப்பில் ஈடுபடுத்துவது குறித்து பள்ளி நிர்வாகம் முடிவெடுக்கலாம். தீவைப்பில் மிகுந்த சேதமடைந்த 'சி' மற்றும் 'டி' பிளாக்குகளை பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு பின்னர், நீதிமன்றம் மீண்டும் அப்போதைய நிலையை ஆராயும் எனக் கூறி விசாரணையை ஜனவரி 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். எல்கேஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது அறக்கட்டளை தரப்பில் வழக்கறிஞர் சாம்ராஜ், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், சிபிசிஐடி தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மாணவியின் பெற்றோர் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு, இடையீட்டு மனுதாரர் எம்.எல்.ரவி தரப்பில். வழக்கறிஞர் சிவஞானசம்பந்தம் ஆகியோர் ஆஜராகி வாதாங்களை முன்வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x