Published : 30 Nov 2022 06:55 AM
Last Updated : 30 Nov 2022 06:55 AM

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை: ஆன்லைனில் டிச.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோப்புப்படம்

சென்னை: சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான 3 வகை சிறப்பு உதவித்தொகை திட்டங்களில் பயனடைய விரும்புவோர், டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்) - எலைட், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (எம்ஐஎம்எஸ்), வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (சிடிஎஸ்) என 3 வகைகளில் செயல்படுத்தப்படுகிறது.

மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று, பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் sdat@tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வரும் 15-ம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர, பிற விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

தகுதியான வின்ணப்பங்கள், அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். பின்னர், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

இத்திட்டங்களில் தேர்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், அவரது காப்பாளர் ஆகியோர், தங்களது முழுமையான விவரங்கள் மற்றும் 2 ஆண்டுகால இலக்குகள் குறித்த விவரங்களுடன் SDAT உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.

பன்னாட்டு அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்கள் வெல்வோருக்கு, கூடுதல் கால நீட்டிப்பு வழங்கப்படும்.

எலைட் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரையும், எம்ஐஎம்எஸ் திட்டத்தில் ரூ.10 லட்சம் வரையும், சிடிஎஸ் திட்டத்தில் ரூ.2 லட்சம் வரையும் உதவித்தொகை வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தை அனைத்து வேலை நாட்களிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x