Published : 30 Nov 2022 06:26 AM
Last Updated : 30 Nov 2022 06:26 AM

உடன்குடியில் மிளா உயிரிழந்த சம்பவம்: 3 வனத்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி: உடன்குடியில் சுருக்கு கயிறு போட்டு பிடித்த போது மிளா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை ஊழியர்கள் 3 பேர்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுஉள்ளனர்.

உடன்குடி கடை வீதிக்குள் கடந்த 27-ம் தேதி இரவு மிளா எனப்படும் கடமான் ஒன்று வழிதவறி வந்துள்ளது. அங்குள்ள வணிக வளாகத்துக்குள் புகுந்த 4 வயதுடைய அந்த பெண் மிளாவை வனத்துறையினர் சுருக்கு கயிறு போட்டு பிடித்தனர்.

ஆனால், சிறிது நேரத்தில் அந்த மிளா உயிரிழந்துவிட்டது. வனத்துறையினர் சுருக்கு கயிறு போட்டு பிடித்ததால், மிளாவின் கழுத்தில் கயிறு இறுக்கி மிளா இறந்ததாக பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும், மிளாவை பிடிக்க சரியான வழிமுறைகளை வனத்துறையினர் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இது தொடர்பாக மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, வனத்துறையினரிடம் விசாரணை நடத்தினார். அதன்படி, மிளாவை பிடிக்க சரியான முறையை கடைபிடிக்க தவறியதாக வனவர் ஆனந்த், வனக்காப்பாளர் கந்தசாமி, வனக்காவலர் ஜோசுவா ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அதிர்ச்சியால் இறந்தது: பின்னர் அவர் கூறியதாவது: உடன்குடியில் மிளா அதிர்ச்சி காரணமாகவே உயிரிழந்திருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கழுத்தில் கயிறு இறுக்கியதால் உயிரிழப்பு ஏற்படவில்லை. இருப்பினும் சுருக்கு கயிறு போட்டு தவறான முறையில் பிடிக்க முயன்றதும் மிளாவுக்கு அதிர்ச்சி ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x