Published : 29 Nov 2022 11:33 PM
Last Updated : 29 Nov 2022 11:33 PM
மதுரை: இதுவரை ஜைக்கா நிறுவனம், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு நிதி விடுவிக்கவில்லை என்று ஆர்டிஐ கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சியினரும் குரல் எழுப்பி வருகின்றனர். மதுரை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘எய்ம்ஸ்’ கட்டுமானப் பணி எப்போது முடியும் என விளக்கமிளக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதனால், மத்திய அரசு விரைவில் கட்டுமானப் பணியை தொடங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தங்கி படிக்கின்றனர். மதுரையில் கட்டிடம் கட்டி திறந்தால் மட்டுமே ‘எய்ம்ஸ்’ மாணவர்களுக்கு, எய்ம்ஸ் தரத்தில் மருத்துவக்கல்வி வழங்க முடியும்.
இந்நிலையில், ஆர்.பாண்டியராஜா என்பவர், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு எய்ம்ஸ் தொடர்பான சில கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு அமைச்சகம் பதில் வழங்கியிருக்கிறது.
அதில், மொத்த திட்ட தொகை ரூ.1977.8 கோடி என்றும். இதில், மொத்த நிதியில் ஜைக்கா 82 சதவீதமும், மத்திய அரசு 18 சதவீதமும் வழங்க உள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஜைக்கா 1621.8 கோடி கடன் வழங்க இருப்பதாகவும், குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இதுவரை ஜைக்கா நிறுவனம் மதுரை எய்ம்ஸ் நிதியை விடுவிக்கவில்லை என்றும், திருத்தப்பட்ட புதிய திட்ட மதிப்பீடுக்கு மத்திய அரசும், ஜைக்கா நிறுவனமும் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மதுரை ‘எய்ம்ஸ்’ தலைமை பொது தகவல் அலுவலர் மற்றும் செயற்பொறியாளர் இந்த தகவலை வழங்கி உள்ளார் என்று ஆர்டிஐ கேள்விகள் மூலம் தகவல் பெற்ற சமூக ஆர்வலர் ஆர்.பாண்டிராஜா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT