Last Updated : 29 Nov, 2022 07:59 PM

7  

Published : 29 Nov 2022 07:59 PM
Last Updated : 29 Nov 2022 07:59 PM

“வாரிசு அரசியலை உலகில் எந்த நாட்டிலும் தடை செய்ய முடியாது” - டி.கே.எஸ்.இளங்கோவன் நேர்காணல்

டி.கே.எஸ்.இளங்கோவன்

திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், திமுக தலைமைக்கழக செய்தித் தொடர்பு தலைவருமான டி.கே.எஸ்.இளங்கோவன் ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்.

தமிழக அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதற்கான வாய்ப்பு குறித்து சொல்லுங்க?

எந்த ஒரு அரசு பதவி ஏற்றாலும் முழு காலமும் ஒரே அணியே தொடர்ந்து இருக்கும் என சொல்ல முடியாது. மாற்றங்கள் இருக்கும். அமைச்சர்களின் பணி விஷயத்தில் முதல்வருக்கு இருக்கும் திருப்தியைப் பொறுத்து அவர் முடிவு எடுப்பார். ஆனால், மாற்றம் எப்போது நடக்கும் என்பதை யாரும் சொல்ல முடியாது.

சில அமைச்சர்களின் செயல்பாட்டின் மீது முதல்வருக்கு அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறது...

நிர்வாகத்தில் அவர்கள் செய்யும் தவறுகள் முதல்வரின் கவனத்திற்குப் போகும்போது அவர் கண்டித்திருக்கிறார்; திருத்தி இருக்கிறார். பெரும்பாலான அமைச்சர்கள் அனுபவம் மிக்கவர்கள். ஒரு சிலர் புதிதாக வந்தவர்கள். புதிய அமைச்சர்களின் செயல்பாட்டில் குற்றம் வந்ததாக இதுவரை தெரியவில்லை. அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் தனிப்பட்ட முடிவு என்பதால் இதுதொடர்பாக அவர் வேறு யாரிடமும் விவாதிப்பதற்கு வாய்ப்பும் கிடையாது.

அமைச்சரவை மாற்றப்பட்டால் அதில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெற எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது?

முதல்வர் நினைத்திருந்தால் அவரை அப்போதே அமைச்சராக்கி இருக்கலாம். அவர் இன்னும் வளர வேண்டும் என்று கருதுகிறார். உதயநிதி ஸ்டாலின் தனது செயல்பாட்டை செம்மைப்படுத்தி வருகிறார். அமைச்சர் ஆவதற்கு அவர் பொறுத்தமானவர் என அனைவரும் கருதுகிறார்கள். அதன் காரணமாகவே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று அவர்கள் முதல்வரிடம் வெளிப்படுத்துகிறார்கள். எனினும், முடிவெடுக்க வேண்டியவர் முதல்வர்தான்.

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுவது பற்றி...

யூகங்களின் அடிப்படையில்தான் செய்திகள் வருகின்றன. முடிவு வந்தால்தான் தெரியும்.

வாரிசு அரசியல் குறித்தும், அதற்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனம் குறித்தும் உங்கள் கருத்து என்ன?

வாரிசு அரசியலை உலகில் எந்த நாட்டிலும் தடை செய்ய முடியாது. என்னைப் பொறுத்தவரை, என் தந்தையார் அரசியலில் இருந்ததால் எனக்கும் ஈடுபாடு வந்தது. எனது தந்தை எந்தக் கொள்கையை பிரச்சாரம் செய்து வந்தாரோ அதை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இந்தியாவில் எல்லா கட்சிகளிலும் இது இருக்கிறது. பலரையும் சந்திக்க முடிகிறது. இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் கருதுகிறார்கள். வாரிசு என்பது சட்டப்படியான நியமனம் அல்ல.

முதல்வரின் மகன் என்பதற்காகவே உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்ற விமர்சனத்திற்கு உங்கள் பதில் என்ன?

உண்மைதான். ஆனால், அவர் அதற்குத் தகுந்தவரா என பார்க்கும்போது, தகுதியானவராக அவரது செயல்பாடுகள் காட்டும்போது அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின். தற்போது மக்கள் அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள். நேருவின் மகள் இந்திரா காந்தியை ஏற்றுக்கொண்டார்கள். ராஜீவ் காந்தியை ஏற்றுக்கொண்டார்கள். தற்போது ராகுல் காந்தியை ஏற்றுக்கொண்டார்கள். வாரிசு என்றாலும் ஒருவர் தலைவராவதற்கு தயாராகிவிட்டார் என்றால், அவரது தலைமையில் சிறப்பாக செயல்பட முடியும் எனும் நம்பிக்கை தொண்டர்களுக்கு வரும்போது இயல்பாகவே அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். .

உதயநிதி ஸ்டாலின் தயாராகிக் கொண்டிருக்கிறாரா? தயாராகிவிட்டாரா?

உதயநிதியின் செயல்பாடுகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன. தனது தொகுதியில் அவர் காட்டுகிற அக்கறை, அந்த மக்களுக்கு அவர் ஆற்றுகிற பணிகள், இளைஞரணிக்கு அவர் அளிக்கும் பங்களிப்பு ஆகியவை அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. தனது தகுதியை அவரே நிரூபிக்கிறார். அதன் காரணமாகவே அவருக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது.

கூட்டுறவுத் துறையின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்திருக்கிறார். இதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பதில் விமர்சனம் செய்திருக்கிறார். அமைச்சர்களுக்குள் நிகழ்ந்துள்ள இந்த கருத்து வேறுபாடு குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இது கூடாது என்பதுதான் என் எண்ணம். ஏனெனில், அமைச்சரவை என்பது கூட்டுப்பொறுப்பு. ஒரு துறையில் சரிவு என்றால் பிற துறை அமைச்சரும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒரு அமைச்சரை மட்டுமே பொறுப்பாக்கக் கூடாது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அதற்கான காரணத்தை சொல்லாதது ஏன் என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். காரணம் என்ன?

மின்துறையை மாநில அரசின் கைகளில் இருந்து ஒன்றிய அரசு எடுத்துக்கொண்ட நிலையில், சில முடிவுகளை ஒன்றிய அரசு அறிவிக்கும்போது, சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.

மாதம் ஒருமுறை மின் கட்டணம், இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை போன்ற தேர்தல் வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை. அதேநேரத்தில், மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தாதா?

விற்பனை வரியைப் பொறுத்தவரை பெரும்பாலான பொருட்களுக்கான வரியை ஜிஎஸ்டி-க்குப் பிறகு ஒன்றிய அரசு எடுத்துக்கொண்டுவிட்டது. ஜிஎஸ்டிக்கு முன் எவ்வளவு வரவு என்பதை மாநில அரசே கணக்கிடும். தற்போது வரவு எவ்வளவு என்பதே தெரியாமல் நாம் திட்டங்களுக்கு செலவு செய்கிறோம். தற்போது நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பதே கடினமான ஒன்றாக மாநில அரசுகளுக்கு மாறிப்போன சூழலில், நாம் இருக்கிறோம். பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஜிஎஸ்டி வரம்புக்குள் வராமல் எதில் மாநில அரசுக்கே வரி விதிப்புக்கான அதிகாரம் இருக்கிறதோ அவற்றின்மீது வரியை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகிறது. ஜிஎஸ்டி இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டிற்கு வருவாய் பற்றாக்குறை இருந்திருக்காது.

மாநிலங்களுக்கான அதிகாரத்தை ஜிஎஸ்டி பறித்துவிட்டதா?

ஆம். மொத்தமாக பறித்துவிட்டது. எந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்பதை மாநிலங்கள்தான் முடிவு செய்ய முடியும். ஒன்றிய அரசு முடிவு செய்ய முடியாது. இதற்கான உரிமை மாநில அரசிடம் இருந்தவரை மாநிலங்களுக்கு சரியான திட்டமிடல் இருந்தது. ஆனால், தற்போது நிலைமை அப்படி அல்ல.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில்தான் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் கூட்டணி அரசில் திமுகவும் இடம்பெற்றிருந்தது. அப்போது, இப்படி ஒரு பிரச்சினை வரும் என்பதை திமுக கவனித்ததா?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுக இடம்பெற்றிருந்தபோது பல பிரச்சினைகளை தடுத்து வைத்திருந்தது. குறிப்பாக சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை நாங்கள் தடுத்தோம். ஆனால், சில மாநில இது வேண்டும் என்றார்கள். எனவே, மாநிலங்கள் விரும்பினால் இதனை அமல்படுத்தலாம் என சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. ஜிஎஸ்டியை காங்கிரஸ் அறிமுகப்படுத்தியபோது நாங்கள் எதிர்த்தோம். எனவே, அப்போது நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள்தான் அதை நிறைவேற்றினார்கள்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், ஆட்சியாளர்கள் மிகப் பெரிய அளவில் ஊழல் செய்வதாகவும், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. அதிமுகவின் இந்த முறையீடு பற்றி திமுக என்ன கருதுகிறது?

எந்த ஆதாரமும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக அதிமுக குற்றம்சாட்டுகிறது. சட்டம் - ஒழுங்கு குற்றச்சாட்டைப் பொறுத்தவரை தற்போது திமுக ஆட்சியில் குற்றவாளிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கைது செய்யப்படுகிறார்கள். அந்த எண்ணிக்கை வெளியே தெரிகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதே இல்லை. சட்டம் - ஒழுங்கு எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதன் எண்ணிக்கை தெரியாத அளவுக்கு குற்றங்கள் நடைபெற்றன.

காவல் துறையை சுதந்திரமாக செயல்பட திமுக விடவில்லை என்ற குற்றச்சாட்டை அதிமுக, பாஜக இரண்டும் முன்வைக்கின்றன...

இது தவறான குற்றச்சாட்டு. காவல் துறையில் யாரும் தலையிடுவதில்லை. அது நேரடியாக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளது. காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது. இதனால், குற்றங்கள் குறைந்துள்ளன.

முதல்வர் மு.க ஸ்டாலினின் செயல்பாடு எவ்வாறு இருக்கிறது?

அவர் உழைக்கிறார். மக்களை அணுகுகிறார். மக்களின் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வேண்டும் என கருதுகிறார். மக்கள் சந்திக்கும் அவர், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனும் நோக்கில் செயல்படுகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘பொம்மை முதல்வர்’ என்று அதிமுக விமர்சிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இப்படி இயங்குகிற ஒரு முதல்வரை எப்படி பொம்மை முதல்வர் என கூற முடியும்? எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக வார்த்தைகளை எங்கிருந்தோ கடன் வாங்கி பிரயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசு - தமிழக அரசு இடையேயான உறவு எப்படி இருக்கிறது?

பல சிக்கல்கள் இருக்கின்றன. மத்திய அரசு வேறு ஒரு திட்டத்துடன் செயல்படுகிறது. மாநில அரசுகளே இருக்கக்கூடாது என்று நினைக்கும் அளவுக்கு அதன் செயல்பாடு உள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தி மாநில அரசுகளின் பல அதிகாரங்களை தாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். ஒற்றை நிர்வாகமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் திட்டமிடுகிறார்கள். இது மிகப் பெரிய தவறு. இலங்கையில் ஏற்பட்டது போன்ற ஒரு சீரழிவை இந்தியாவிலும் இது ஏற்படுத்திவிடும். ஆனால், மத்திய அரசு இதை உணரவில்லை. நாட்டின் பொருளாதாரம் குறித்தோ, மக்கள் நலன் குறித்தோ மத்திய அரசு கவலைப்படவில்லை. ஒரு மத நாடாக இதை மாற்றும் முயற்சியில் இதற்கு மாநில அரசுகள் தடையாக இருக்கின்றன என்ற காரணத்தால் அந்த மாநிலம் என்ற நிலையை மாற்றி ஒற்றை இந்தியாவாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இது மிக மிக மோசமான நிலையை நாட்டிற்கு ஏற்படுத்திவிடும்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட மனுவின் நிலை குறித்து தகவல் ஏதும் வந்துள்ளதா?

ஒரு தகவலும் வரவில்லை. மனுவை பெற்றுக்கொண்டோம் என்ற தகவல்கூட வரவில்லை. ஆளுநர்கள் சொந்தமாக செயல்படவில்லை. ஒன்றிய அரசின் கட்டளைக்கு ஏற்ப செயல்படுகிறாரகள் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆன்லைன் சூதாட்டமான ரம்மியை தடை செய்வதற்கான அவசர தடைச் சட்டத்திற்கு அனுமதி அளித்து கையொப்பமிட்டவர் ஆளுநர். ஆனால், சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்ட பிறகு கையெழுத்திடாமல் இருக்கிறார் என்றால், இவருடைய சட்டத்தையே இவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், இதில் இருந்தே ஆளுநர்கள் எந்த அளவு அரசியல் அமைப்புச் சட்டப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஆளுநரின் தாமதத்திற்கு என்ன காரணம் இருக்கும் என நினைக்கிறீர்கள்?

இந்த அரசுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி வேறு ஒரு காரணமும் இல்லை.

ஆளுநரின் அதிகாரத்தைப் பறிக்கும் 15 மசோதக்களை அவரின் ஒப்புதலுக்காக அனுப்பியதுதான் அவரது கோபத்திற்குக் காரணமா?

ஆளுநர்கள் முறையாக நடந்து கொள்வார்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவர்கள் தவறாக நடந்து கொள்ளும்போது... பல்கலைழக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் துணை வேந்தருக்கு உண்டு. ஆனால், அவரே துணை வேந்தரை தேர்வு செய்துவிட முடியாது. இதற்கென உள்ள தேர்வுக்குழு அளிக்கும் பரிந்துரையின்படிதான் அவர் நியமிக்க முடியும். ஆனால், தங்களின் மதச் சார்பான கல்விக் கொள்கையை நிறைவேற்றக்கூடிய சிலரை நியமிக்கிறார் எனும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரம் பறிக்கப்படும் நிலை உருவாகிவிடுகிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமான போக்கு.

நேர்காணல் - வீடியோ வடிவில் இங்கே...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x