Published : 29 Nov 2022 06:43 PM
Last Updated : 29 Nov 2022 06:43 PM

“எங்களால் மக்களுக்கு எதுவும் செய்யமுடியவில்லை” - மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் விரக்தியில் வெளிநடப்பு

மதுரை மாநகராட்சிக் கூட்டம் | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: ''இதுவரை நடந்த கூட்டங்களில் கவுன்சிலர்களாக இருந்து மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை'' என்று கூறி விரக்தியுடன் அதிமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி பேசுகையில், ''கவுன்சிலர்கள் அனைவரும் ஒற்றுமையாக கடமையை உணர்ந்து மாமன்றத்தில் பேசும்போது கண்ணியம் தவறாமல் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். நமக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நாமே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது புதிய சாலைகள் போடுவதற்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியிருக்கின்றன. பாதாள சாக்கடைப் பணிகள் நடக்கிறது. குடிநீர் பணிகள் நடக்கிறது. நிதி நிலையை உயர்த்தும் பணிகள் சிறப்பாக நடக்கிறது'' என்றார்.

விவாதம் தொடங்கியபோது அதிமுக எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள் எழுந்து, “கடந்த கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பதவி உயர்வு பட்டியல் தீர்மானம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இந்தக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது. அதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. நீதிமன்றத்தில் நிற்காது'' என்றார். அதற்கு மேயர் இந்திராணி, ''அந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ரத்து செய்யப்படுகிறது'' என்றார்.

அதனால், அதிருப்தியடைந்த திமுக கவுன்சிலர் ஜெயராமன், ''நாம் 85 கவுன்சிலர்கள் உள்ளோம். 15 கவுன்சிலர்கள் கொண்ட அதிமுகவினருக்கு பயந்து நாம் ஏன் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த தீர்மானத்தை நிறைவேற்றுங்கள், நாங்கள் ஒத்துழைக்கிறோம்'' என்றனர். அதற்கு மேயர் இந்திராணி, ''அவர்களுக்கு பயந்து ரத்து செய்யவில்லை. நிர்வாக காரணங்கள் சில உள்ளன. அதற்காகவே அந்த தீர்மானம் ரத்தாகிறது'' என்றார்.

அதன்பிறகும் அதிமுக கவுன்சிலர்கள் எழுந்து, ''13 கூட்டங்கள் வரை பங்கேற்று விட்டோம். கவுன்சிலர்களாக இருந்து மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. குறைந்தபட்சம் சாலை வசதி செய்து கொடுக்க முடியவில்லை. குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க முடியவில்லை. பம்பிங் ஸ்டேஷன் வேலை செய்யாததால் சாலைகளில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சொல்லி சொல்லி வாய் வலித்துவிட்டது. எதுவுமே நடக்காத இந்த மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை'' என்று கூறி வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து விவாதம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் பேசுகையில், ''முதல்வர் சிறப்பான திட்டங்களை கொண்டு வருகிறார். ஆனால், மாநகராட்சி நடவடிக்கை அவருக்கு பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. சாக்கடை நீர் தீராத பிரச்சனையாக நீடிக்கிறது. ஒரு இடத்தில் பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பணிகள் நடந்ததால் உடனடியாக முடித்துவிட்டு அடுத்த இடத்திற்கு பணிக்கு செல்ல வேண்டும்'' என்றார்.

மண்டலத் தலைவர் வாசுகி: “எங்கள் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகள் கிராமங்கள் நிறைந்தது. ஏற்கெனவே சாலைவசதி, பாதாள சாக்கடை வசதியில்லாமல் இருக்கிறது. தற்போது இருக்கிற சாலைகளை பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்திற்காக தோண்டிப் போட்டுள்ளோம். மெதுவாக இப்பணிகள் நடப்பதால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். மாடுகள் சாலைகளில் சாதாரணமாக நடமாடுகின்றன. அவற்றால் விபத்துகள் அதிகளவு நடக்கிறது.”

ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங்: “மாடுகளைப் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக சூப்பர்வைசர், சுகாதார ஆய்வாளர்கள் மூவருக்கு சார்ஜ் வழங்கியிருக்கிறோம். மாடு வளர்ப்போரை அழைத்துப் பேச கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படும்.”

மண்டலத்தலைவர் முகேஷ் சர்மா: “கவுன்சிலர்கள் பதிவு செய்யும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் உடனடியாக கிடைப்பதில்லை. தெருவிளக்கு பராமரிப்பில் 2 நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. அவர்களுக்கு இடையே எல்லைப் பிரச்சினை இருப்பதால் மக்கள் தெருவிளக்குகளை சரி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.”

கவுன்சிலர்களுக்கு செல்போன் தடை: “மாநகராட்சி கூட்டத்தில் நேற்று பங்கேற்ற அனைத்து கவுன்சிலர்களும் கூட்டரங்கு உள்ளே செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதனால், கூட்டரங்கு நுழைவு வாயிலிலேயே கவுன்சிலர்கள் செல்போன்களை மாநகராட்சிப் பணியாளர்கள் டோக்கன் போட்டு வாங்கி வைத்துக் கொண்டனர். கூட்டம் முடிந்தபிறகு கவுன்சிலர்கள் டோக்கன்களை கொடுத்து தங்கள் செல்போன்களை பெற்றனர்.

47-வது வார்டு கவுன்சிலர் பானு முபாரக் மந்திரி மட்டும் தன்னுடைய செல்போனை வழங்காமல் கூட்டரங்கிற்குள்ளே எடுத்து வந்து விட்டார். மாநகராட்சி ஊழியர்கள் உள்ளே வந்து, அவரிடம் கெஞ்சி கூத்தாடி செல்போனை வாங்கி சென்றனர். மாநகராட்சியின் இந்த செல்போன் தடை நடவடிக்கை கவுன்சிலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x