Published : 29 Nov 2022 06:29 PM
Last Updated : 29 Nov 2022 06:29 PM
புதுச்சேரி: “ஆளுநர்கள் எல்லோரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் தகுதியின் அடிப்படையில் அமர்த்தப்பட்டவர்கள். வாரிசு அடிப்படையில் அமர்த்தப்பட்டவர்கள் இல்லை” என்று திமுக எம்.பி. கனிமொழிக்கு பதிலளிக்கும் வகையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் பிரசா முண்டா பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடியினர் கவுரவ தின விழா, காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரயங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது: ‘‘நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதில் வருத்தப்படும் விஷயம் என்னவென்றால், சில தினங்களுக்கு முன்பு ஒரு கட்சி இங்கே பிரிவினையைப் பற்றி பேசும்போது, "ராணுவ வீரர் ஒருவர், நாட்டின் எல்லையில் மக்களுக்காக தனது வசதி வாய்ப்புகளையும், இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் நாங்கள் நாட்டை காப்பாற்ற துன்பப்பட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் பிரிவினை பேசிக்கொண்டிருக்கிறீர்களே என்று கூறினார்.
இதனை எதிர்த்து அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கடலூரில் ராணுவ வீரரின் வீட்டுக்கு சென்று குடும்பத்தாரை மிரட்டி, துன்புறுத்தியுள்ளனர். இதனை எந்தவிதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது. ராணுவ வீரர்கள் எந்தவிதத்திலும் விமர்சிக்கப்படக்கூடாது என்பது அரசியலமைப்புச் சட்ட விதிகளியே இருக்கிறது. ஆகவே இத்தகைய நிகழ்வுகள் தேசப்பற்றை குலைப்பதாகவும், தேசத்துக்காக போராடுகின்ற வீரர்களை நிந்திப்பதாகவும் இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது.’’என்றார்.
அப்போது, வழக்கறிஞர் நியமனத்தில் முதல்வர் கொடுத்த பட்டியலை புறக்கணித்துவிட்டு, சென்னையை சேர்ந்தவர்களை தேர்வு செய்ததாகவும், புதுச்சேரியை சேர்ந்தவர்களை புறக்கணித்ததாகவும் உங்கள் மீது குற்றச்சாட்டு கூறுப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆளுநர் தமிழிசை கூறும்போது, ‘‘எனக்கும், இந்த தேர்வுக்கும் சம்பந்தமே இல்லை. அது நேர்மறையாக அவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் தான் என்னிடம் வந்தது. அதில் ஒருவர் மட்டுமே சென்னையைச் சேர்ந்தவர், மற்ற அனைவரும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள்.
தலைமைச் செயலர், சட்ட செயலர் ஆகியோர் நேர்முகத் தேர்வு நடத்தி, மதிப்பெண் கொடுத்து அதிகாரபூர்வமாக தகுதிப்படைத்தவர்கள் என்று அவர்கள் கொடுத்த பட்டியல்தான் இது. ஆதலால் இதில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை. புதுச்சேரி புறக்கணிக்கப்படுவதை என்றுமே நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
காசிக்கு சென்று தமிழ்ப் பாடலை பாடிவிட்டு தமிழகத்தைச் சேர்ந்த மகளாக இருந்தாலும், புதுச்சேரியின் சகோதரி என்பதை அங்கே நிலை நிறுத்திவிட்டு வந்துள்ளேன். அதுமட்டுமின்றி புதுச்சேரிக்காக தேவையான உதவிகளை மத்திய அரசிடம் சென்று கேட்டு வருகிறேன். முதல்வருக்கும், எனக்கும் எந்தவித விரிசலும் இல்லை. பாசப்பிணைப்புதான் இருக்கிறது. அது செயற்கையாக ஏற்படுத்தப்படுகின்ற விரிசல்தான்’’என்றார்.
தமிழக ஆளுநர் காலாவதியானவர் என கனிமொழி விமர்சித்திருப்பது குறித்து கேட்டதற்கு, ‘‘ஆளுநர்களைப் பற்றி இப்படி கருத்துச் சொல்வதை தவிர்க்க வேண்டும். கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. அவர்கள் கருத்துகளை சொல்லலாம். ஆனால், ஆளுநர்களை மிகவும் மோசமாக விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆளுநர்கள் எல்லோரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் தகுதியின் அடிப்படையில் அமர்த்தப்பட்டவர்கள். வாரிசு அடிப்படையில் அமர்த்தப்பட்டவர்கள் இல்லை. இதனை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
ஆன்லைன் ரம்மிக்கு தடை: அமைச்சர் நமச்சிவாயம் கூறும்போது, ‘‘ஆதிதிராவிடர் நலத்துறையை பொறுத்தவரையில் அரசு அனைவருக்கும் இலவச கல்வி கொடுக்க முடிவு எடுத்துள்ளது. இலவச கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணபித்தால்தான் இலவச கல்வி வழங்க முடியும். இந்தப் பள்ளியில் இருந்து கூட 19 மாணவர்கள் விண்ணப்பிக்காமல் இருக்கின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, விண்ணப்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி தடை விதிப்பதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. வெகு விரைவில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படும்’ ’என்றார். அப்போது ஆளுநர், “ஆன்லைன் ரம்மி தடை மட்டுமில்லை. புதுச்சேரி மாநில மக்களுக்கான எந்த திட்டமாக இருந்தாலும் நான் ஒப்புதல் கொடுக்கிறேன். அதில் எந்த பிரச்சினையும் இல்லை’’ என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT