Published : 29 Nov 2022 06:06 PM
Last Updated : 29 Nov 2022 06:06 PM

சென்னை மாநகராட்சியின் ரூ.2,200 கோடி வருவாயில் ரூ.489 கோடி மட்டுமே வசூல்: கணக்கு குழுத் தலைவர் அதிர்ச்சி தகவல்

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை | கோப்புப் படம்

சென்னை: சென்னை மாநகராட்சி தனது மொத்த வருவாய் ரூ.2200 கோடியில் ரூ.489 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக கணக்கு குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று (நவ.29) நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பேசிய கணக்கு துறையின் நிலைக்குழு தலைவர் தனசேகரன், சென்னை மாநகராட்சியின் நிலம் மற்றும் உடைமைத் துறை மற்றும் வருவாய் துறையின் செயல்பாடுகள் குறித்து பேசினார். அவரது கூறிய தகவல்களின் முக்கிய அம்சங்கள்:

  • நிலம் மற்றும் உடைமைத்துறையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 446 நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு்ள்ளன.
  • கடந்த 2021 மார்ச் 31-ம் தேதி வரை குத்தகை கேட்புத் தொகை ரூ.419.52 கோடி. அதில் ரூ.2.69 கோடி என, 0.65 சதவீதம் மட்டுமே மாநகராட்சி வசூலித்துள்ளது.
  • மீதமுள்ள ரூ.416.83 கோடி நிலுவைத் தொகையாக உள்ளது.
  • 2020 -21 கல்வி பயன்பாட்டிற்காக குத்தகை விடப்பட்டவற்றின் வாயிலாக ரூ.248.95 கோடி நிலுவைத் தொகையாக உள்ளது.
  • அசோக் நகரில் இயங்கிவரும் தனியார் பள்ளி ரூ.69 லட்சம் அளவில் மாநகராட்சி வாடகை செலுத்தாமல் உள்ளது. ஒன்பது கல்வி நிறுவனங்கள் குத்தகை செலுத்தாமல் உள்ளன.
  • வால்டாக்ஸ் சாலையில் மட்டும் வணிகப் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட 201 நிலங்களில் ரூ.92.91 கோடி வாடகை நிலுவையில் உள்ளது
  • மற்ற இடங்களில் வணிக பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட 75 நிலங்களில் ரூ.45.7 கோடி, குடியிருப்புக்கு வழங்கப்பட்ட 136 நிலங்களில் ரூ.8 கோடி நிலுவையில் உள்ளது.
  • தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆறு நிலங்களில் ரூ.3.96 கோடியும், மதசார்புடைய அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நான்கு நிலங்களில் ரூ.2.75 கோடியும் மாநகராட்சிக்கு வர வேண்டிய குத்தகை தொகை நிலுவையாக உள்ளது.
  • 62 வழக்குகள் காரணமாக குத்தகைத் தொகை வசூலிக்க முடியாமல் உள்ளது.
  • குத்தகைத் தொகை செலுத்தாமல் மாநகராட்சி நிலங்களை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு நினைவூட்டல் கடிதம் மட்டும் அனுப்பாமல், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்த நிலங்களை மாநகராட்சி இழக்க நேரிடும்.

வருவாய்த் துறை

  • கடந்த 2020 – 21 ஆண்டு சொத்து வரி 1,012.78 கோடி வசூலாக வேண்டும். ஆனால், 409.78 கோடி ரூபாய் என, 40.48 சதவீதம் மட்டுமே வசூலானது. 602.57 கோடி ரூபாய் நிலுவை தொகையாக உள்ளது.
  • கடந்த நான்கு ஆண்டுகளில் சராசரியாக 56 சதவீதம் மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.
  • இதேபோல் 852.07 கோடி ரூபாய் தொழில் வரியில், 76.53 கோடி ரூபாய் என, 8.98 சதவீதம் மட்டுமே வசூலானது. 775.54 கோடி ரூபாய் வசூலாகவில்லை.
  • 2,283.94 கோடி ரூபாய் மொத்த வருவாயில், 489.53 கோடி மட்டுமே மாநகராட்சி வசூலித்து உள்ளது. மீதமுள்ள 1,794.41 கோடி ரூபாய் நிலுவை தொகையாக உள்ளது.
  • நிலைக்குழுவின் தணிக்கை ஆய்வின்போது, அண்ணாநகர் மண்டலம் 100-வது வார்டில் இயங்கி வரும் பிரபல நகைகடை நிறுவனம் தனது வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வரும் நிலத்திற்கு பல ஆண்டுகளாக குடியிருப்பு அடிப்படையில் வரி செலுத்தி வருகிறது.
  • இவ்வாறு கோடிக்கணக்கில் வணிகம் செய்து வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • சொத்து வரி வசூலின்போது 11.78 கோடி ரூபாய் காசோலையாக பெறப்பட்டு, அவை வங்கியில் பவுன்ஸ் ஆகி உள்ளது. இந்த மதிப்பிழந்த காசோலை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தற்போதைய சூழலில், காசோலை வாங்குவதற்கு பதிலாக, கார்டு, யுபிஐ பேமென்ட் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • வரி செலுத்தாதவர்களுக்கு வெறும் நினைவூட்டல் கடிதம் அனுப்புவது தீர்வாகாது. எனவே, ஒரு ஆண்டுக்கு மேல் வரி கட்டாதவர்களுக்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  • சென்னை மாநகராட்சியின் வருமானத்தை பெருக்க 29 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள நிறும வரி, எட்டு ஆண்டுகளாக உயர்த்தப்படாத கேபிள் டிவி தரை வாடகைகளை உயர்த்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x