Published : 29 Nov 2022 03:08 PM
Last Updated : 29 Nov 2022 03:08 PM
மதுரை: திமுகவில் வேறு கட்சிகளுக்கு போய்விட்டு வந்தவர்கள், வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு மாநிலப் பொறுப்பு வழங்கியதை சமூக வலைதளங்களில் திமுகவினர் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் பொதுக்குழுவும் நடத்தி முடிக்கப்பட்டது. திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி உட்பட பல்வேறு அணிகள் உள்ளன. இந்த அணிகளின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களை தலைமையால் நியமிக்கப்படுவர். அதன்படி திமுகவின் அனைத்து அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் திமுகவில் இருந்து வேறு கட்சிகளுக்கு போய்விட்டு திரும்ப வந்தவர்களுக்கும், வேறு கட்சிகளில் இருந்து சமீபத்தில் வந்தவர்களுக்கும் மாநில பொறுப்பு வழங்கியது திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, திமுகவிலிருந்து பாஜகவுக்கு போய்விட்டு கடந்த பிப்ரவரி மாதம் திமுகவில் மீண்டும் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் தலைமை நிலைய அலுவலக செயலாளராக நியமிக்கபட்டதும், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்த பத்மபிரியாவுக்கு தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் பதவி வழங்கியதும் திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பணப்பட்டி தினகரன், திமுகவில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் நியமனங்களை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் திமுகவினரே கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கு.க.செல்வம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தது போது திமுகவினர் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இப்போது அவர் மீண்டும் திமுகவில் சேர்ந்து அதே பதவிக்கு வந்திருப்பது, பாஜகவில் சேர்ந்தபோது அவரை விமர்சித்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக திமுகவை சேர்ந்த நவீன வெற்றி கொண்டான் என்பவர் தனது ட்விட்டர் பதிவில், "உண்மைக்குமே கு.க.-வுக்கும், பத்மபிரியாவுக்கும் போஸ்டிங் கொடுத்ததை நினைத்து சிரிப்பு சிரிப்பாக வருகிறது. தனியா கெக்கேபிக்கேனு சிரிக்கவும், வீட்டில் திட்டறாங்க" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது மற்ற பதிவுகளில், "பாஜவுக்கு போய்விட்டு மீண்டும் வரலாமானு யோசிக்கிறேன். உறுப்பினர் கார்டு சீனியாரிட்டி கட் ஆகிடுமா?", "யாரெல்லாம் கு.க.செல்வம் பாஜக போனபோது குமுறி எடுத்திங்களோ, அந்த ட்வீட்களை ஸ்கிரின்ஷாட் எடுத்து பிரின்ட் போட்டு கு.க-கிட்ட கொடுத்து, அறிவாலயத்தில் நுழைய விடாமல் செய்து விடுவோம் இருங்க", "கு.க-வுக்கு மீண்டும் பதவியா, அய்யோ, அது பாஜவுக்கு போன போது வெச்சு செய்தோமே, அப்போது எச்சரிக்கையும் செய்தோம், திரும்ப வந்து இங்க பதவி வாங்கிட போராருனு, அப்போது பொளக்கப்போறாருனு, அது உண்மையாகிட்டா... " எனக் குறிப்பிட்டுள்ளார்.
கு.க.செல்வத்தை போல் திமுகவில் சேர்ந்த சூர்யா சிவாவையும் ஒப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில், "தல திருச்சி சூர்யா உங்கள் அக்கா தம்பி பாசம் தொடர்பாக நீங்கள் பேசிய அருமையான அழகு சொற்களை நாங்கள் கிண்டல் பண்ணிருந்தா மனசுல வெச்சுக்காதீங்க, ஏன்னா திரும்ப நீங்கள் திமுகவுக்கு வந்து முதன்மை செயலாளர் பதவி வாங்கவும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது நாங்கள் எதாவது பஞ்சாயத்து கொண்டு வந்தா எங்களுக்கு ஆப்பு அடிச்சிடாதீங்க, அதனால் இப்போது ஒரு துண்டு போட்டு வைக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுகள் சமூக வலைதளங்களில் உள்ள திமுகவினர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பதிவுக்கு திமுகவினர் அதிகளவில் லைக் போட்டு வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப அணி: உலகமே இணையதளத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ஒவ்வொரு கட்சியிலும் தகவல் தொழில்நுட்ப அணி முக்கியத்துவம் பெறுகிறது. சமூக வலைதளங்களில் அரசியல் களமாடுவதில் பாஜக முதலிடத்தில் உள்ளது. திமுக தொடர்பான பாஜகவின் பதிவுகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கும் நிலைக்கு திமுக உள்ளது. இதனால் தமிழக அரசியலில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் பங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரிவின் மாநில பொறுப்பில் பத்மபிரியா நியமிக்கப்பட்டது தொடர்பாக அப்பிரிவின் மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜாவிடம் சமூக வலைதளங்களில் ஆர்வமாக இயங்கும் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அது தொடர்பான பதிவுகளில், "திமுகவில் தகுதியுள்ளவர்கள் பலர் இருக்கும்போது அந்தப் பெண்ணை மாநில நிர்வாகியாக நியமிக்கும் முடிவு வந்தபோது குறைந்தபட்ச எதிர்ப்பையாவது பதிவு செய்திருக்க வேண்டும், எதிர்ப்பு தெரிவித்திருப்பீர்கள் என நம்புகிறோம், கட்சிக்கு உழைக்காதவர்கள் தன் கண் முன்னே கட்சியில் உயர்ந்த பொறுப்பில் உட்கார்ந்தா யார் ஏற்பார்கள்" என டி.ஆர்.பி.ராஜாவை கேட்டுள்ளனர்.
இந்தப் பதிவுகளுடன், "உழைப்பவனை தேடி கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால்தான் பலனுண்டு, கிடைத்தவனை கொண்டு நடத்தினால் பலனில்லை" என அண்ணாவின் வாசகம், "உழைப்பவரிடம் கட்சிப் பதவி இருக்க வேண்டும், கட்சியை வைத்து பிழைப்பவரிடம் கட்சிப் பதவி போய்விடக்கூடாது" என்ற கருணாநிதி வாசகத்தையும் கோத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT