Published : 29 Nov 2022 01:10 PM
Last Updated : 29 Nov 2022 01:10 PM
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கண்ணதாசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "தமிழக ஆளுநராக ஆர். என்.ரவி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி பதவி ஏற்றுகொண்டார். அவர் பதவியேற்ற நாளிலிருந்து ஒரு பிரச்சினைக்குரிய நபராகவே இருந்து வருகிறார்.
பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று சனாதன தர்மம் பற்றியும், திராவிட இயக்க கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருகிறார். தமிழக அரசு அனுப்பியுள்ள கோப்புகளுக்கு உரிய கையெழுத்து போடாமல், காலம் தாழ்த்தி வருகிறார். எந்தவொரு காரணமும் இல்லாமல் மாதக்கணக்கில் கோப்புகளை நிலுவையில் வைத்து பொதுமக்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார்.
மேலும் ஆர்.என். ரவி, புதுவையில் உள்ள ஆரோவில் பவுண்டேஷன் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1988 ஆரோவில் பவுண்டேஷன் சட்டத்தின் கீழ் தலைவர் பதவி என்பது சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 158 உட்பிரிவு 2- -ன் கீழ் ஆளுநர் எந்தவொரு லாபம் தரக்கூடிய நிறுவனத்திலும் பொறுப்பு வகிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதைமீறி அவர் தலைவராக உள்ளார் . இதன் மூலம் அவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக, ஆளுநராக அவர் பதவியேற்கும்போது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக செயல்படுகிறார். எனவே அவர் ஆளுநராக பதவி வைக்க தகுதியற்றவர். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" மனுவில் கோரியிருந்தார். மனுதாரர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT