Published : 29 Nov 2022 12:52 PM
Last Updated : 29 Nov 2022 12:52 PM

நாமக்கல் | தலைக்கவசம் அணியாததால் நகராட்சி பணியாளருக்கு அபராதம் விதிப்பு: காவல் நிலையம் முன்பு குப்பைகள் கொட்டியதால் பரபரப்பு

நாமக்கல்: போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த நகராட்சி பணியாளர், காவல் நிலையம் முன்பு குப்பைகளை கொட்டி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் போக்குவரத்து போலீஸார் தினசரி வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், நேற்று நாமக்கல் நகர காவல் நிலையம் அருகே திருச்சி சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நாமக்கல் நகராட்சி பணியாளரான கந்தசாமி என்பவரை போலீஸார் தடுத்து நிறுத்தி அவர் மீது தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்து உள்ளனர்.

அப்போது அவர் தான் நகராட்சி பணியாளர் என்றும் தன்மீது எவ்வாறு வழக்குப் பதிவு செய்வீர்கள் என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் கந்தசாமி மீது தலைக்கவசம் இன்றி வாகனத்தை இயக்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து நாமக்கல் போக்குவரத்து போலீஸார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.‌

அபராதத்தை கட்டி விட்டு சென்ற கந்தசாமி ஆத்திரத்தில் நாமக்கல் போக்குவரத்து காவல் நிலையம் முன்பு நகராட்சி வாகனத்தில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி சென்றார். இதையறிந்த காவல் துறையினர் வேறு வழியின்றி குப்பைகளை அகற்றினர். இச்சம்பவத்தால் காவல் நிிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x