Published : 29 Nov 2022 11:09 AM
Last Updated : 29 Nov 2022 11:09 AM

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச் சாலையாக மேம்படுத்துக: அன்புமணி

கோப்புப்படம்

சென்னை: "சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச் சாலையாக மேம்படுத்த வேண்டும். அந்த சாலையில் தேவையான இடங்களில் சேவை சாலைகளையும், குறிப்பிட்ட தொலைவுக்கு ஓரிடத்தில் வாகனங்கள் அந்த சாலையில் இணையவும், வெளியேறவும் வசதிகள் செய்யப்பட வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை - திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆண்டுகளில் 6,131 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன; அவற்றில் 2,076 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிர்களை பலிவாங்கும் சாலையாக மாறியுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

சென்னையிலிருந்து திருச்சி வரையிலான 334 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2018 ஜனவரி முதல் 2022 ஜூன் மாதம் வரையிலான நான்கரை ஆண்டுகளில் நிகழ்ந்த சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த விவரங்களை தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆங்கில நாளிதழ் ஒன்று பெற்றுள்ளது. இந்த காலகட்டத்தில் நடைபெற்ற மொத்தம் 6,131 சாலை விபத்துகளில் 2,076 பேர் உயிரிழந்துள்ளனர்; 7,733 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துகளுக்கு முக்கியக் காரணம் சாலைகளில் போதுமான அளவில் சேவை சாலைகள் இல்லாததும், சாலைகளின் வடிவமைப்பு மிகவும் மோசமாக இருப்பதும் தான். சாலை விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட, அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழையும் போது, அதிவேகத்தில் வரும் வாகனங்களுடன் மோதுவது தான் முக்கியக் காரணம் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டின் மிக முதன்மையான சாலை சென்னை - திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலை தான். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், காவிரி பாசன மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், வடக்கு தமிழகத்தின் சில மாவட்டங்கள் என தமிழ்நாட்டின் 80% பகுதிகளில் இருந்து சென்னை வருவதற்கு இந்த சாலை தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வரும் போதிலும், அதற்கான நடவடிக்கைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் மேற்கொள்ளாதது தான் விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும்.

சென்னை - திருச்சி இடையிலான இப்போதைய 4 வழிச்சாலை 2000-ஆவது ஆண்டில் அமைக்கப்பட்டது ஆகும். அதன்பின்னர் 22 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று வரை அந்த சாலை மேம்படுத்தப்படவில்லை. பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரை மட்டும் 8 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கும் கூட சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் காரணமல்ல. பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரை பறக்கும் சாலை அமைப்பதற்காகத் தான் இந்த விரிவாக்கம் செய்யப்படுகிறது.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச்சாலையாக உயர்த்தப்பட்ட போது, அது தினமும் 35 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கும் திறன் கொண்டதாக இருந்தது. அப்போது அதைவிட குறைவான வாகனங்கள் தான் அந்த சாலையில் பயணித்தன. ஆனால், இப்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 1.40 லட்சம் வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. இது அதன் கொள்ளளவை விட 4 மடங்கு அதிகம் ஆகும். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்தும் கூட, அது குறைந்தபட்சம் 6 வழிச்சாலையாகவோ, 8 வழிச்சாலையாகவோ மேம்படுத்தப்படாதது தான் விபத்துகள் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையை கடப்பதற்கு சுரங்கப் பாதைகளோ அல்லது மேம்பாலங்களோ கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 22 ஆண்டுகளில் ஒரு சில இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் இத்தகைய கட்டமைப்புகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. இதை செய்வதற்கு பதிலாக அதிக விபத்து நடக்கும் இடங்களில் விபத்து பகுதி என்ற பலகைகள் மட்டும் வைக்கப்பட்டன. ஒரு சிக்கலுக்கு தீர்வை ஏற்படுத்தாமல், தீர்வு என்று மட்டும் எழுதி வைப்பது எந்த அளவுக்கு பயனற்றதோ, அதற்கு இணையானது தான் விபத்துக்கான காரணங்களை களையாமல், இது விபத்து ஏற்படும் பகுதி என்று எழுதி வைப்பதும் ஆகும். அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை; விபத்துகளும் குறையவில்லை.

கரோனா காலத்தில் குறைந்திருந்த போக்குவரத்து இப்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை சராசரியாக ஒன்றரை லட்சம் என்ற அளவை அடுத்த சில மாதங்களில் எட்டக்கூடும். அத்தகைய சூழலில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதை அரசு தடுக்க வேண்டும்.

அதற்காக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச் சாலையாக மேம்படுத்த வேண்டும். அந்த சாலையில் தேவையான இடங்களில் சேவை சாலைகளையும், குறிப்பிட்ட தொலைவுக்கு ஓரிடத்தில் வாகனங்கள் அந்த சாலையில் இணையவும், வெளியேறவும் வசதிகள் செய்யப்பட வேண்டும். இதற்கான திட்டங்களை வகுத்து விரைவாக சாலை கட்டுமானப் பணிகளை தொடங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x