Published : 29 Nov 2022 09:45 AM
Last Updated : 29 Nov 2022 09:45 AM
சென்னை: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிகளுக்காக யூடியூபர் கார்த்திக் கோபிநாத் வசூலித்த தொகையை விசாரணை நீதிமன்றத்தின் வங்கிக் கணக்குக்கு மாற்ற மிலாப் செயலி நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.30 லட்சம் வசூல்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிகளுக்காக வசூலித்த ரூ.30 லட்சத்தை கோயில் திருப்பணி கணக்கில் செலுத்த அனுமதிக்கக் கோரி, யூடியூபர் கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்திருந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என மிலாப் செயலி தரப்பில் கோரப்பட்டது. கோயில் நிர்வாகம் தரப்பில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் சீரமைப்புப் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துவிட்டன என்றும், திருப்பணிக்கு தேவைப்படும் பணத்தை அளிக்க நன்கொடையாளர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிகளுக்காக கார்த்திக் கோபிநாத் வசூலித்த தொகையை விசாரணை நீதிமன்றத்தின் வங்கிக் கணக்குக்கு மாற்ற மிலாப் செயலி நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
மேலும், நன்கொடையாளர்கள் குறித்த விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் நீதிபதி அறிவுறுத்தினார். பின்னர் இந்த வழக்கை கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT