Published : 29 Nov 2022 09:14 AM
Last Updated : 29 Nov 2022 09:14 AM
சென்னை: தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கல்லூரிகள், ஆய்வகங்கள், கூட்டரங்குகளின் கட்டிப்பணி தொடர்பாக அனைத்து பொறியாளர்கள், உயர் கல்வித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
உயர்கல்வித் துறையில் 382 கட்டிடப் பணிகளுக்காக ரூ.422.8 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கி உள்ளார். அனைத்து பணிகளையும் முதல்வர் கண்காணித்து கொண்டிருக்கிறார். சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.63 கோடிசெலவில் அரங்கம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதி கட்டப்படும் என முதல்வர் அறிவித்தார்.
அதற்கான திட்டம் வரையறை செய்யப்பட்டு, நிதித்துறை அனுமதி பெற்று இன்னும் 20 நாட்களில் அவைகளுக்கான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ராணி மேரி கல்லூரியில் ஆய்வுப் படிப்புகளுக்கான விடுதியும் கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அதற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 20 அரசு கலை கல்லூரிகளும், கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்காமல் இருக்கும் 6 கல்லூரிகளும் சேர்த்து 26 கல்லூரிகளுக்கான கட்டிடப்பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். தற்போது, 16 கல்லூரிகளுக்கான கட்டிடப் பணிகள் நடந்து வருகின்றன.
இன்னும் 10 கல்லூரிகள் கட்டுவதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் மூலமாகவும், பொறியாளர்கள் மூலமாகவும் இடங்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அடுத்த 2023-24-ம் கல்வி ஆண்டுக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு, புதிய கல்லூரிகள் திறக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT