Published : 16 Dec 2016 09:13 AM
Last Updated : 16 Dec 2016 09:13 AM
வார்தா புயலால் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை கடந்த 12-ம் தேதி தாக்கிய வார்தா புயலால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 17 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன. 40 கோபுரங்கள், 800 மின்மாற்றிகள் மற்றும் 4500 மின் பகிர்மானப் பெட்டிகள் சேதமடைந்தன. மேலும், 15,000 கி.மீ. உயர்நிலை மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு மேலும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக மின்சார வாரியத்தின் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தினமும் சராசரியாக 13 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மட்டுமே தினமும் 3 ஆயிரம் மெகாவாட் வரையில் மின் விநியோகம் செய்யப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள புயலால் மின்சார வாரியத்துக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வடசென்னை, வல்லூர் மின் நிலையங்களில் இருந்து வரும் உயர் மின்அழுத்த மின்பாதைகள் மற்றும் முக்கிய மின்கோபுரங்கள், துணை மின்நிலையங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதுவரையில் மின்வாரியத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது. மின்சார வாரியத்தின் இழப்பு சுமார் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என நினைக்கிறோம். தமிழக அரசு முதல்கட்டமாக ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின்விநியோகம் செய்து வருகிறோம். அடுத்த சில நாட்களில் முழு அளவில் மின்சாரம் கிடைக்கும்’’ என்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தின் முன்னாள் உறுப்பினர் எஸ்.நாகல்சாமி கூறும்போது, “முன்பெல்லாம் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தேவை யான மின்கம்பங்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பணிமனைகளிலேயே தயாரிக்கப்பட்டன. இவை தரமானதாக இருந்தன. 1965 1970-ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட மின்கம்பங்கள் தற்போதுகூட சில இடங்களில் வலுவாக நிற்கின்றன. ஆனால், மின்கம்பங்கள் தயாரிக்கும் பணிகளை தற்போது தனியார் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. அவை தயாரிக்கும் மின் கம்பங்கள் போதிய அளவுக்கு தரமானதாக இல்லை. மின்சாதன பொருட்களும் தரமற்றவையாக இருக்கின்றன. எனவே அவற்றின் தரம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும். மேலும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க நிலத்தடி கேபிள் இணைப்புகளை அதிகரிக்க வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறும்போது, “இன்னும் பெரும்பாலான இடங்களில் மின்சார விநியோகம் சீராகவில்லை. மின்சாரத்தை சீராக வழங்க போதிய மின்சாதன பொருட்கள் மற்றும் மின் ஊழியர்களை நியமித்து பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். சென்னை, கோவை, திருச்சி, சேலம் மாநகராட்சிகளில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிலத்தடி கேபிள் இணைப்புகள் வழங்கும் முறை இருக்கிறது. இதை மேலும் விரிவுப்படுத்துவதன் மூலம் வரும் காலங்களில் பெரிய அளவிலான சேதங்களை தடுக்கலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT