Published : 29 Nov 2022 07:31 AM
Last Updated : 29 Nov 2022 07:31 AM

சென்னை ஐஐடி மாணவர்களின் மின்சார பந்தய கார் அறிமுகம்: இயக்குநர் காமகோடி வாழ்த்து

சென்னை ஐஐடி மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கிய முதல் மின்சார பந்தய காரை அறிமுகம் செய்துவைத்த சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி. படம்: பு.க.பிரவீன்

சென்னை: மின்சாரத்தில் இயங்கும் முதல்பந்தய காரை சென்னை ஐஐடிமாணவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். சென்னை ஐஐடி மாணவர்கள் ‘ஆர்எஃப்ஆர்’ எனப்படும் மின்சார அடிப்படையிலான முதல் பந்தய காரை அறிமுகம் செய்துள்ளனர். சென்னை ஐஐடியின் பல்வேறு துறைகளை சேர்ந்த 45 மாணவர்களை கொண்ட ரஃப்தார் குழுவினர் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட செயல்முறையின் விளைவாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியின் போட்டிக் குழுக்களில் ஒன்றான ரஃப்தார் குழு, தொழில் துறை தரத்தை மேம்படுத்தவும், பொறியியல் மாணவர்களிடம் உலகத்தர தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வளர்க்கவும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இக்குழு எதிர்நோக்கி உள்ளது என்று சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் பங்கேற்கும் ‘ஃபார்முலா ஸ்டூடன்ட் ஜெர்மனி’ என்ற பிரபல கார் பந்தயப் போட்டி 2023 ஆகஸ்டில் நடக்க உள்ளது. அந்த போட்டிக்கு இந்த காரை கொண்டு செல்ல மாணவர்கள் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மின்சார பந்தய கார் அறிமுக விழாவில், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி பேசியபோது, ‘‘அதிக மாசுபாடு ஏற்படுத்தாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை நோக்கி உலகம் நகர்ந்துவருகிறது. அதனால், வாகனங்களை மின்சார வாகனங்களாக விரைந்து மாற்றம் செய்வது அவசியமாகிறது.

எனினும், உலகஅளவில் மின்சார வாகன தொழில்இன்னும் ஆரம்ப கட்டத்திலேயேஇருக்கிறது. இத்தொழிலின் வளர்ச்சிக்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் மிகப் பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளன’’ என்றார். மின்சார பந்தய காரை உருவாக்கியுள்ள மாணவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x