Published : 17 Dec 2016 11:30 AM
Last Updated : 17 Dec 2016 11:30 AM
வார்தா புயலினால், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சுமார் 200 மரங்கள் விழுந்தன. இதனால், 7 பேர் படுகாயமடைந்தது மட்டுமல்லாமல், 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அடிப்படை உதவிகளுக்காக முகாமில் வாழும் மக்கள் காத்திருக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி- பெத்திக்குப்பத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளன. 1990-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த முகாமில் உள்ள 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 980 குடும்பங்களை சேர்ந்த 3,800 பேர் வசித்து வருகின்றனர். ஆரம்பத்தில் அரசு அமைத்து கொடுத்த ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைகள் கொண்ட இந்த குடியிருப்புகளில், 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட புயல் காற்றின் போது, ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைகள் சேதமடைந்தன.
இதனால், கீற்று உள்ளிட்ட மேற்கூரைகளை அகதிகளே அமைத்து, வசித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்த முகாமில் ஏற்கனவே சுமார் 20-க்கும் மேற்பட்ட பழமையான ஆலமரம், காட்டுவாகை மரங்கள் இருந்து வந்தன. அதுமட்டுமல்லாமல், அகதிகளே தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளில் மா, பலா உள்ளிட்ட 1,500-க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வந்தனர்.
இச்சூழலில், கடந்த 12-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் வீசிய வார்தா புயலால், ஆலமரம் உள்ளிட்ட பழமையான 20 மரங்கள் குடியிருப்புகள் மேல் விழுந்ததால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இதனால், சுமார் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், பள்ளியின் சுற்றுச் சுவர் ஆகியவை சேதமடைந்தன.
அதுமட்டுமல்லாமல், இலங்கை அகதிகள் முகாமில், அகதிகளே வளர்த்து வந்த மரங்களில் சுமார் 180 மரங்கள் விழுந்ததால், 180-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன.
மேலும், 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் மற்றும் ஒரு மின் மாற்றி, காற்றினால் சாய்ந்ததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் துண்டிப்பு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை அகதிகள் மிகுந்த அவதியுற்று வருகின்றனர் என கூறுகிறார் இலங்கை அகதிகள் முகாமின் தலைவர் சிவகுமார்.
அவர் மேலும் கூறியதாவது:
முகாமுக்கு மிக அருகேயே வட்டாட்சியர் அலுவலகம் செயல்படுகிறது. ஆனால், புயலின் பாதிக்கப்பட்ட முகாமினை 4 நாட்களாக அரசு அதிகாரிகள் எட்டிப்பார்க்கவில்லை. குடிநீர், உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளை கூட அரசு செய்ய வில்லை. நேற்று (வெள்ளிக்கிழமை) வட்டாட்சியர் முகாமுக்கு வந்தார். தொடர்ந்து, அதிகாரிகள் சேதங்களை கணக்கெடுக்கின்றனரே தவிர, குடிநீர், உணவு உள்ளிட்ட உடனடி நிவாரணங்களை வழங்க எந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக இலங்கை அகதிகள் முகாம் மக்கள் பொது சேவையில் ஈடுபட்டிருக்கும் கனகலட்சுமி நம்முடன் பேசும்போது, "வார்தா புயல் முகாமை புரட்டிபோட்டுவிட்டது. இங்கு இருந்த 100 ஆண்டு பழமையான மரம் உட்பட பல்வேறு மரங்கள் சாய்ந்துவிட்டன. மின் விநியோகம் சீராக 2 வாரங்கள் ஆகும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இப்போதைக்கு ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், வீடுகள் பல சேதமடைந்திருப்பதால் பாதிக்கப்பட்டோர் அக்கம்பக்கமுள்ள வீடுகளில் தங்கியிருக்கின்றனர். சில தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் உணவு பொட்டலங்களை வழங்கிச் செல்கின்றனர். இப்போது எங்களுக்கு பாய், போர்வை, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, தீப்பெட்டிகள் கிடைத்தால் உதவியாக இருக்கும்" என்றார்.
சேதமடைந்த வீடு : படம்: இரா.நாகராஜன்
சேத மதிப்பீட்டில் மக்கள் அதிருப்தி:
முகாமில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் 140 வீடுகளே சேதமடைந்துள்ளதாக கூறுகின்றனர். அதிகாரிகள் சரியாக சேத மதிப்பீடு செய்யவில்லை என முகாம்வாசிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT