Last Updated : 16 Dec, 2016 12:33 PM

 

Published : 16 Dec 2016 12:33 PM
Last Updated : 16 Dec 2016 12:33 PM

ஏடிஎம்களில் தேவையான அளவு பணம் இருப்பு வைக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு, ரிசர்வ் வங்கி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் அனைத்து ஏடிஎம்களிலும் போதுமான அளவு பணம் இருப்பு வைக்கக்கோரிய மனுவுக்கு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கியும் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்து கடந்த நவ. 8ம் தேதி பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பதிலாக புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.

வங்கிகள், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு புழக்கத்தில் விடப்படாததால் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான மறுநாள் நவ. 9ம் தேதி முதல் இப்போது வரை பெரும்பாலான ஏடிஎம்கள் மூடியே கிடக்கின்றன. வங்கிகளிலும் போதுமான பணம் இல்லாததால் பொதுமக்கள் தங்களின் கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவே திண்டாடி வருகின்றனர்.

ஒரு சில ஏடிஎம்களில் பணம் வைக்கப்படுகிறது. அந்தப் பணத்தை எடுப்பதற்கு நீண்ட வரிசையில் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. அவ்வாறு காத்திருந்தும் பல நேரங்களில் பணம் எடுக்க முடிவதில்லை.

மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகிறது. ரூபாய் நோட்டு பிரச்சினையால் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முடங்கியுள்ளது. இதனிடையே ரூபாய் நோட்டு விவகாரத்தில் நிலைமை சீரடைய இன்னும் 50 நாளாகும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து ஏடிஎம்களிலும் தேவையான பணம் இருப்பில் வைக்க மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிடக்கோரி மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், ‘500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்து மத்திய அரசு திடீரென வெளியிட்ட அறிவிப்பால் நாட்டில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏடிஎம்களில், வங்கிகளில் பணம் எடுப்பதற்காக நீண்டநேரம் காத்திருந்த 33 பேர் உயிரிழந்துள்ளனர். திருமணம் உள்ளிட்ட பல்வேறு அவசர தேவைகளுக்கு பணம் கிடைக்காமல் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவது, மருத்துவமனை செலவு மற்றும் தினம்தோறும் தேவையான செலவுக்கு கூட பணம் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர்.

ஏடிஎம்மில் ரூ.2 ஆயிரம் மட்டுமே வருகிறது. இதை விட குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. வங்கிக்கு சென்றால் பணம் இல்லை என்கின்றனர். வங்கியில், ஏடிஎம்மில் போதுமான அளவு பணம் இல்லாத நிலையில் பொதுப்பணித்துறை ஒப்பந்தகாரர் சேகர்ரெட்டி உள்ளிட்ட பலரின் வீடுகளில் இருந்து பல கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் ஏராளமான சேகர் ரெட்டிகள் உள்ளனர். பணத் தட்டுப்பாடு தொடர்ந்தால் இந்தியா மயமான பூமியாக மாறும்.

பணம் விவகாரத்தில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தினமும் ஒவ்வொரு உத்தரவுகளால் மக்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வறுமையால் இறப்பை தடுக்கவும், உணவு பொருட்களை வாங்கவும், அவசர தேவையை பூர்த்தி செய்யவும் அனைத்து ஏடிஎம்களிலும் தேவையான பணம் இருப்பு வைக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் மனுவில் ரமேஷ் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, நாடு முழுவதும் இப்பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்றார்.

அப்போது நீதிபதி செல்வம், ‘நாடு முழுவதும் பணப் பிரச்சினையை உருவாக்கியது மத்திய அரசு தான். மத்திய அரசு தான் பிரச்சினையை தீர்க்க வேண்டும். எனது சம்பளத்தை நானே எடுக்க முடியாமல் தவிக்கிறேன் என்றார்.

பின்னர், இந்த மனுவுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஜன. 2-ம் தேதி பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x