Published : 26 Dec 2016 01:17 PM
Last Updated : 26 Dec 2016 01:17 PM

எந்தப் பெண்ணுக்கும் எனக்கு நிகழ்ந்த அவலம் நடக்கக் கூடாது: தடகள பயிற்சியாளர் சாந்தி உருக்கம்

எனக்கு நிகழ்ந்த அவலம் வேறெந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது என்று தடகள பயிற்சியாளர் சாந்தி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சாந்தி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி வெளியிட்ட பதிவு:

''3 வருட கடும் போராட்டத்துக்குப் பிறகு எனக்கு அரசுப் பணி கிடைத்திருக்கிறது. எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வெற்றி என்னுடைய உரிமை. நான் யாரிடமிருந்தும் பரிதாபத்தை எதிர்பார்க்கவில்லை. அது எனக்குத் தேவையுமில்லை.

இந்த நாட்டுக்காக நான் 12 பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்திருக்கிறேன். நான் ஊக்க மருந்து உட்பட எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் என்னிடம் இருந்து பதக்கங்களை எடுத்துச்செல்ல யாருக்கும் உரிமை இல்லை. இருந்தாலும் என்னிடமிருந்து பதக்கங்கள் பறிக்கப்பட்டன. இது எனக்கல்ல, இந்த தேசத்துக்கான அவமானம்.

இந்தப் பதக்கங்கள் அனைத்தும் என்னுடைய கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கான அடையாளங்கள். நான் பெண் அல்ல என்று சிலர் நினைத்ததாலேயே நான் அரை நாளுக்கும் மேலாக நிர்வாணமாக நிறுத்தப்பட்டேன். தோஹாவில் உலக அரங்கில், இந்திய அதிகாரிகள் முன்னாலேயே அவமானப்படுத்தப்பட்டேன். கேலிக்கு உள்ளாக்கப்பட்டேன். அப்போதும் அரசாங்கம் எனக்குப் பின்னால் நிற்கவில்லை.

நீங்கள் பதக்கம் வென்றால் உங்களைக் கொண்டாடுவார்கள். ஆனால் உங்கள் பாலினமே கேள்விக்குள்ளாக்கப்பட்டு, நீங்கள் அவமானப்படுத்தப்பட்டால் அரசு அமைதியாக இருக்கும். இந்தியத் தாயின் மகள் அவமானப்படுத்தப்படுவதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக நிற்கும்.

இது என்னுடைய தகுதியைப் பற்றிய கேள்வி அல்ல. ஆனால் எனக்கு நடந்த அவலம் இனி எந்தவொரு பெண்ணுக்கும் நடந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

முழு நம்பிக்கை மற்றும் பலத்தோடு என்னுடைய குரலை உயர்த்திச் சொல்கிறேன். நான் பெண்ணாகத்தான் பிறந்தேன். பெண்ணாகவே வாழ்கிறேன். பெண்கள் மட்டும் தாங்கள் யார் என்றும், என்ன செய்கிறோம் என்றும் நிரூபிக்க வேண்டிய பரிதாபத்தில்தான் விளையாட்டு சூழல் உள்ளது. விளையாட்டைத் தாண்டி இதை மனித உரிமைகள் மீறலாகப் பார்க்கிறேன். இதற்கு எதிராக என் கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன்'' என்று கூறியுள்ளார் சாந்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x