Published : 28 Nov 2022 11:55 AM
Last Updated : 28 Nov 2022 11:55 AM

இதுவரை 15 லட்சம் மின் இணைப்புதாரர்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்: அமைச்சர் செந்தில்பாலாஜி 

மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் சிறப்பு முகாமை ஆய்வு செய்த அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: "மின்சார வாரியத்தை மேம்படுத்த வேண்டும். அதேபோல், புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மின்சார வாரியத்தை நவீனப்படுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கக்கூடிய பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது" என்று தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் இன்று (நவ.28) தொடங்கியது. சென்னையில் இந்த முகாமை ஆய்வு இன்று செய்தபின், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "இதுவரை 15 லட்சம் மின் இணைப்புதாரர்கள், ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். இதற்காக இன்னும் விரிவாக பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் செயல்பட்டு வருகின்ற 2811 பிரிவு அலுவலகங்களில் இன்று முதல் வருகின்ற டிசம்பர் 31-ம் தேதி வரை, மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த பணிகள் பண்டிகை நாட்கள் தவிர ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் பிரிவு அலுவலகங்களில் நடைபெறுகின்றன. எனவே பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக இதில் சில மாறுபட்ட கருத்துகளை பத்திரிகைகள், ஊடகங்களில் உண்மைக்கு மாறாக பகிரப்படுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம், அரசு மானியம் வழங்கி 100 யூனிட்டிற்குள்ளாக பயன்படுத்தக்கூடிய குடிசைகள், 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, நெசவாளர்களுக்கு வழங்கப்படுகிற இலவச மின்சாரம், விவசாயிகளுக்கான மானியம் உள்பட ஏற்கெனவே இருக்கின்ற அரசு இலவச மின் திட்டங்கள், அரசு வழங்கும் மானியங்கள் அனைத்து நடைமுறைகளும் தொடர்ந்து பின்பற்றப்படும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

உண்மைக்கு மாறாக, சில பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் மின் இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைப்பதால் இவையெல்லாம் ரத்தாகிவிடும் என்று தவறான பிரச்சாரங்களை முன்னெடுக்கப் படுகின்றன. இலவச மின்சாரம் உள்ளிட்ட அரசு மானியம் வழங்கக்கூடிய அனைத்து திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

இந்தப் பணி என்பது, எவ்வளவு பேர் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர்? எவ்வளவு பேர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்? ஒருவர் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருக்கிறது? இப்படி எந்தவிதமான தரவுகளும் மின்சார வாரியத்திடம் இல்லை. ஏறத்தாழ ஒரு கோடியே 15 லட்சம் மின் இணைப்புதாரர்களுக்கான தரவுகள் மட்டுமே மின்சார வாரியத்தில் இருந்தன.

மின்சரா வாரியத்தை மேம்படுத்த வேண்டும். அதேபோல், புதிய தொழில்நுடப்த்துக்கு ஏற்ப மின்சார வாரியத்தை நவீனப்படுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கக்கூடிய பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x