Published : 28 Nov 2022 08:02 AM
Last Updated : 28 Nov 2022 08:02 AM
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் செய்தி எதிரொலியாக, மருத்துவமனைகளில் கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு அறிகுறிகள் இல்லாவிட்டால் கரோனா பரிசோதனை தேவை இல்லை என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
‘தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை செய்யக் கூடாது - தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை’ என்ற தலைப்பிலான செய்தி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று (நவ.27) வெளியாகியிருந்தது.
‘தமிழகத்தில் பல மாதங்களுக்கு முன்பே கரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு விலக்கியதோடு, தடுப்பூசி முகாம்களையும் நிறுத்திவிட்டது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என்பது மட்டும் தொடர்கிறது. இவ்வாறு கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்’ என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை (டிபிஎச்) இயக்குநர் செல்வவிநாயகம், கரோனா பரிசோதனைதொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சுகாதார சேவையின் அனைத்து துணை இயக்குநர்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் சுகாதார அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை. மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, கரோனா பரிசோதனைகள் குறித்த புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், சுவாசக் கோளாறுகள், வாசனை, சுவை இழப்பு உள்ளவர்களுக்கு மட்டும் இனி கரோனா பரிசோதனை செய்தால் போதும்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் கரோனா பரிசோதனை (ஆர்டி-பிசிஆர்) தேவை இல்லை. குறிப்பாக, அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு கூட அறிகுறிகள் இருந்தால் மட்டும் கரோனா பரிசோதனை செய்தால் போதும். அறிகுறிகள் இல்லாவிட்டால் கரோனா பரிசோதனை அவசியம் இல்லை.
அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். வெளிநாட்டு விமானங்களில் வருபவர்களில் தோராயமாக 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யும் நடைமுறையும் தற்போது கைவிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT