Published : 28 Nov 2022 06:24 AM
Last Updated : 28 Nov 2022 06:24 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான தங்கத்தை உருக்கி, சுமார் 4 ஆயிரம் கிலோ தங்கத்தை வைப்பு நிதியாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
சென்னை பெரம்பூர் செம்பியம் லட்சுமி அம்மன் கோயில், வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயில், கொருக்குப்பேட்டை பெரியநாயகி அம்மன் கோயில், கீழ்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோயில் உள்ளிட்ட 4 கோயில்களில், ரூ.1.48 கோடி மதிப்பிலான திருப்பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகர்புறங்களில் நீண்டகாலமாக குடமுழுக்கு நடைபெறாத 200 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பெரம்பூர் லட்சுமி அம்மன் கோயிலில் ரூ.20 லட்சத்திலும், வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் ரூ.88 லட்சத்திலும், கொருக்குப்பேட்டை பெரியநாயகி அம்மன் கோயிலில் ரூ.30 லட்சத்திலும், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோயிலில் ரூ.10 லட்சத்திலும் திருப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களைப் பாதுகாக்குமாறு உத்தரவிட்ட முதல்வர், அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளார். அதில் 60 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேலும், 409 கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து கோயில்களையும் படிப்படியாக புனரமைத்து, பாதுகாக்கும் பணியை அறநிலையத்துறை மேற்கொள்ளும்.
தைப்பூச விழாவையொட்டி பழனி முருகன் கோயிலுக்கு நடைபயணம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் 10,000 பேர் வீதம் 20 நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
பெரியபாளையம் பவானியம்மன் கோயில்நகைகளை தங்கமாக மாற்றி, 98 கிலோ தங்கம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.05 கோடி வட்டி கிடைக்கும். அதேபோல, இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 28 கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ரூ.38 லட்சம் வட்டி கிடைக்கிறது. இந்த வட்டித் தொகைகள் கோயில் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும்.
இதேபோல, தமிழகத்தில் கோயில்களுக்குச் சொந்தமான நகைகளை உருக்கி, 4 ஆயிரம் கிலோ தங்கம் கோயில் பெயரில் வைப்பு நிதியாக வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாய் கோயில்கள் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில், எம்எல்ஏ-க்கள் ஆர்.டி.சேகர், ஜெ.எபினேசர், எம்.கே.மோகன், அறநிலையத் துறை சென்னை மண்டல இணை ஆணையர் ந.தனபால், உதவி ஆணையர் எம்.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT