Published : 28 Nov 2022 07:18 AM
Last Updated : 28 Nov 2022 07:18 AM
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளும் கடல் அலையைக் கண்டுகளிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மரப்பாதையை சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் எம்.பி., மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த மரப்பாதை சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் கடல் அருகே வரை சென்று அதன் அழகைக் கண்டு ரசிக்கலாம்.
விவேகானந்தர் நினைவிடம் எதிரே, மெரினா கடற்கரையின் ஆரம்பத்திலிருந்து கடல் முன்பு 10 மீட்டர் தூரம் வரை இப்பாதை நிறுவப்பட்டுள்ளது. மரப்பாதையின் தொடக்கத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படுத்துவதற்காக சக்கர நாற்காலிகள் 20 எண்ணிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலே முதல்முறையாக இதுபோன்ற பாதை தமிழகத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. பாதைஅருகே மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதியும் தற்காலிகமாக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT