Published : 17 Dec 2016 10:17 AM
Last Updated : 17 Dec 2016 10:17 AM
பாரம்பரிய, மருத்துவ குணம் நிறைந்த நெல் ரகங்களான கட்டிச் சம்பா, கொச்சி சம்பா ரகங்களை சாகுபடி செய்து, அதை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தி வரும் விவசாயத் தம்பதியினர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், புத்தளத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணபெருமாள் (59). இவரது மனைவி முத்தம்மை ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. தங்கள் சாதனை குறித்து `தி இந்து’விடம், கிருஷ்ண பெருமாள் கூறியதாவது:
மொத்தமாக 6 ஏக்கரில் நெல் சாகுபடி செய்கிறேன். 3 ஆண்டுகளுக்கு முன் வரை முழுக்க ரசாயன விவசாயம் தான். வீட்டுத் தேவைக்கு மட்டும் 50 சென்ட்டில் பாரம்பரிய கட்டிச் சம்பா ரகத்தை, இயற்கை முறையில் சாகுபடி செய்வேன்.
கட்டுக்குள் சர்க்கரை நோய்
இயற்கையில் விளைந்த கட்டிச்சம்பா அரிசியை திருநெல்வேலியில் உள்ள சகோதரிக்கு கொடுத்து அனுப்பினேன். சர்க்கரை நோயாளியான அவரது ரத்த சர்க்கரை அளவு குறைந்திருந்தது. இதைப்பார்த்து அதிசயித்த மருத்துவர், அவரது சாப்பாட்டு முறைகளை கேட்டுள்ளார். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருப்பதற்கு பாரம்பரிய ரகமான கட்டிச் சம்பா அரிசியே காரணம் என, மருத்துவர் கூறியுள்ளார். தொடர்ந்து அவரே, என்னிடம் கட்டிச்சம்பா நெல்லை வாங்கி, தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு கொடுத்தார். அதன் பின்னர் தான் பாரம்பரியத்தின் பெருமை எனக்குத் தெரிந்தது.
படிப்படியாக ரசாயன விவசாயத்தை குறைத்து விட்டு, பாரம்பரிய இயற்கை வழி வேளாண்மையில் நெல் சாகுபடிப் பரப்பை அதிகரித்தேன். இப்போது முதல் போகத்தில் கட்டிச் சம்பாவும், இரண்டாம் போகத்தில் கொச்சி சம்பா ரகமும் சாகுபடி செய்தேன்.
அவலாக்கி விற்பனை
நெல் அறுவடை செய்ததும் அப்படியே விற்காமல், அரிசியாகவும், அவலாகவும் மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துகிறேன். விதைத்தவனே விலை வைப்பது, பாரம்பரிய, இயற்கை வழி சாகுபடியில் மட்டுமே சாத்தியமாகிறது.
நான்கரை ஏக்கரில் ரசாயன விவசாய நெல் உற்பத்தியில் கிடைக்கும் லாபத்தை விட, ஒன்றரை ஏக்கரில் இயற்கை முறை விவசாயத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. என் வீட்டிலேயே ஆடு, மாடு, கோழி என கால்நடைகள் இருப்பதால் அதன் கழிவுகளையே இயற்கை உரமாக போடுகிறேன்.
குமரி மாவட்டத்தின் பாரம்பரிய ரகங்களான கட்டிச்சம்பா, கொச்சி சம்பா ஆகியவை சாகுபடி செய்வது இப்போது அரிதாகி வருவதால், விதை உற்பத்தி செய்து, நண்பர்களுக்கு விநியோகித்து வருகிறேன். நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் அரசு நெல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளும், இந்த பாரம்பரிய நெல் நாற்றுக்களை வாங்கிச் சென்றுள்ளனர்” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT