Published : 08 Dec 2016 08:49 AM
Last Updated : 08 Dec 2016 08:49 AM
ஜெயலலிதாவுக்கு அடுத்து அதிமுகவின் தலைமை யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு நாடெங்கும் ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமைப் பொறுப்புக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஏற்றுக் கொள்ளப்படுவாரா அல்லது நிராகரிக்கப்படுவாரா என்ற விவாதமும் வீதிதோறும் நடைபெறுகிறது.
அதிமுகவில் தன்னிகரில்லா தலைவராக விளங்கிய ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அக்கட்சிக்குள் நடைபெறும் அதிகார மாற்றத்துக்கான நிகழ்வுகள் தேசிய அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பாஜக, காங்கிரஸ் போன்ற தேசியக் கட்சிகளின் தலைமைகளும் அதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
தற்போதைய நாடாளுமன்ற மக்களவையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அடுத்து 37 உறுப்பினர்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளது அதிமுக. மாநிலங்களவையிலும் இக்கட்சிக்கு 13 உறுப்பினர்கள் உள்ளனர். இரு அவைகளிலும் சேர்த்து மொத்தம் 50 உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஒரே மாநில கட்சி அதிமுக மட்டுமே.
ஜெயலலிதா எனும் தலைமைக்கு கிடைத்த மாபெரும் மக்கள் செல்வாக்குதான் அதிமுகவின் இத்தகைய பெருமைக்கு காரணம். இவ்வாறு அதிமுகவை வழிநடத்திச் சென்ற பலம் பொருந்திய தலைவரான ஜெயலலிதாவின் மறைவு, அக்கட்சிக்குள் மிகப்பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை தலைமையேற்று வழிநடத்தக் கூடிய அடுத்த தலைவர் யார் என்பதை அறிந்து கொள்வதில் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா தனது அரசியல் வாரிசு என்று யாரையும் கைகாட்டவில்லை. இந்நிலையில் சசிகலா தலைமையை வலியுறுத்தும் ஒரு குழு, கட்சி நடவடிக்கைகளில் சசிகலா தலையீட்டை விரும்பாத மற்றொரு குழு என அதிமுகவில் பிளவு ஏற்படும் என்ற பேச்சு உள்ளது. அவ்வாறு அதிமுகவில் பிளவு ஏற்பட்டால் எம்எல்ஏக்கள் மத்தியிலும் அந்த பிளவு பிரதிபலிக்கும். பலமான எதிர்க்கட்சியாக திகழும் திமுகவுக்கு இன்னும் சுமார் 30 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தால் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்துவிடும். ஆகவே, அதிமுகவில் பிளவு ஏற்படுமானால், அதில் ஒரு பிரிவினரின் ஆதரவைப் பெற்று திமுக நிச்சயம் ஆட்சி அமைத்துவிடும் என்று பலரும் பேசுகின்றனர். ஜெயலலிதா இல்லாத அதிமுகவால் உடனடி பலன் பெறும் கட்சியாக திமுகதான் இருக்கும் என்று பேசப்படுகிறது.
இந்நிலையில், தேசிய அரசியலிலும் அதிமுகவின் அடுத்தகட்ட தலைவர் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு தற்போது மிகவும் நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற மக்களவையில் பலம் பொருந்திய கட்சியாக பாஜக திகழ்ந்தாலும், மாநிலங்களவையில் போதிய உறுப்பினர்கள் அக்கட்சிக்கு இல்லை. அதனால் அரசின் மிக முக்கியமான முடிவுகள் வெற்றி பெற வேண்டுமானால் மாநிலங்களவையில் தோழமைக் கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய நிலையில் உள்ளது. இந்தச் சூழலில் அதிமுகவின் 13 மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆதரவை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் பாஜகவுக்கு உள்ளது. ஆகவே, அதிமுகவின் புதிய தலைமை எவ்வாறு அமையப் போகிறது என்பதை பாஜக தலைமையும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. இதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற பல கட்சிகளுக்கும் அதிமுகவின் புதிய தலைமை குறித்து பல எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
இதற்கிடையே, சசிகலாவின் தலைமையை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா, மாட்டார்களா என்பதுதான் தற்போது பிரதான அரசியல் விவாதப் பொருளாகியுள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் பிரவேச காலம் தொடங்கி, எம்ஜிஆர் மறைவின்போது மிக மிக நெருக்கடியான காலத்தில் அவருக்கு உற்ற துணையாக உடனிருந்தவர் சசிகலா மட்டுமே. ஜெயலலிதாவை அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டவர்.
ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடல் அருகே அவரது முதல் பிரதிநிதியாக சசிகலாதான் நின்று கொண்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை தங்களது இரங்கலை சசிகலாவிடம்தான் தெரிவித்துச் சென்றனர். ஜெயலலிதா உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்த மேடையைச் சுற்றிலும் சசிகலா குடும்பத்தினர் வீற்றிருந்தனர். மிக நீண்ட நாட்களாக அதிமுகவுடன் வெளிப்படையான தொடர்பு இல்லாமல் இருந்த சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் போன்றவர்களும் ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி நின்றதை தமிழக மக்கள் அனைவரும் தொலைக்காட்சிகளில் பார்த்தனர்.
இந்தக் காட்சிகள் யாவும் ஜெயலலிதாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட முதல் நபர் சசிகலாதான் என்பதை நாட்டுக்கு உணர்த்துவதாக இருந்தன. மேலும், ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கட்சி, தற்போது சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டதையே இது காட்டுவதாகவும், அதிமுகவின் அதிகாரமிக்க அமைப்பான பொதுக்குழு விரைவிலேயே கூடி சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக முறைப்படி தேர்வு செய்யும் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
அதேநேரத்தில் ஜெயலலிதாவை தங்கள் உயிரினும் மேலான தலைவராக ஏற்றுக்கொண்ட அதிமுக தொண்டர்கள், சசிகலாவை தலைவராக ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே என்ற கருத்தையும் பரவலாக கேட்க முடிகிறது.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியதாவது:
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஜெயலலிதா விலக்கி வைத்தபோது அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆரவாரமும், மகிழ்ச்சியும் ஏற்பட்டது என்பது யாவரும் அறிந்த உண்மை. அதேபோல சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்த காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு அனைவரும் அறிந்ததே. ஜெயலலிதாவுக்கு இத்தகைய துயரம் ஏற்பட சசிகலாவின் குடும்பத்தினரே காரணம் என்ற புலம்பலை வெளிப்படையாகவே அதிமுகவினரிடம் காண முடிந்தது.
இதை ஜெயலலிதாவும் உணர்ந்துகொண்ட காரணத்தாலேயே கட்சியின் உயர் பதவிகளுக்கு சசிகலாவை முன்னிறுத்தவில்லை. அண்மைக்கால கட்சியின் செயல்பாடுகளிலும் சசிகலாவின் வெளிப்படையான தலையீடுகள் எதுவும் தெரியாமலேயே ஜெயலலிதா பார்த்துக் கொண்டார். இந்தச் சூழலில் தற்போது சசிகலாவை அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு முன்னிறுத்தினால் அதை தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது மிகவும் சந்தேகத்துக்குரியதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு முற்றிலும் எதிரான வாதத்தை வேறு சில அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கிறார்கள். ‘‘எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக என்பது முழுக்க முழுக்க கருணாநிதியின் எதிர்ப்பு உணர்வுகளை ஒன்று திரட்டி கட்டப்பட்ட இயக்கம். தற்போதைய சூழலில் அதிமுக பிளவுபட்டு பலவீனமடை வதன் மூலம் திமுக பலம் பெறும் என்றால் அதை அதிமுகவின் அடிமட்டத் தொண்டன் ஒருநாளும் ஏற்றுக் கொள்ளமாட்டான்’’ என்கிறார்கள் அவர்கள்.
‘‘ஜெயலலிதா மறைவையடுத்து புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டு, அவரது தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி மிக சுமுகமாக நடந்தேறியுள்ளன. அதுபோலவே கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு சசிகலா தேர்வு செய்யப்படுவதும் சிக்கலின்றி முடியும்’’ என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
எனினும் இந்த வாதத்தை எதிர்ப்பவர்கள், ‘‘ஜெயலலிதா வின் உடல் கிடத்தி வைக் கப்பட்டிருந்த மேடையில் நேற்று சசிகலா குடும்ப அங்கத்தினர்கள் நிறைந்திருந்ததை கண்டோம். கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இனி எவ்வாறு இருக்கும் என்பதற்கான சிறு அடையாளமே இந்தக் காட்சிகள். ஒருவேளை இதை அதிமுகவினர் ஏற்றுக்கொண்டாலும்கூட, தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’’ என்கின்றனர்.
அதிமுக வரலாற்றின் எதிர்காலத்தில் என்ன நிகழப் போகிறது என்பதை காலம்தான் தீர்மானிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT