Published : 11 Dec 2016 12:00 PM
Last Updated : 11 Dec 2016 12:00 PM

ஆதார் எண் பதிவு செய்யாத ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் நிறுத்தம்: மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஊழியர்கள் தவிப்பு

மதுரை மாவட்டத்தில் ஆதார் எண் பதிவு செய்யாத ரேஷன் கார்டுளுக்கு பொருட்களை வழங்க வேண்டாம் என வட்ட வழங்கல் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 9,43,668 ரேஷன் கார்டுகள் உள்ளன. 1,394 ரேஷன் கடைகள் உள்ளன. 987 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், பொது விநியோகத்தை முறைப்படுத்தி போலி ரேஷன் கார்டுகளை கண்டு பிடிப்பதற்காக, ரேஷன் கார்டுகளை ஆதார் எண்ணுடன் கணினி மூலம் இணைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்காக கடந்த ஜூன் மாதம் பாயின்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) கருவிகள், ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்கள் ஆதார் எண், செல்போன் எண் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆதார் எண், செல்போன் எண் பதிவு செய்யாத நுகர்வோர்களின் ரேஷன் கார்டுகளை மாவட்ட உணவு வழங்கல் துறை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. அந்த கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

இதனால், ஆதார் எண் இல்லாத ரேஷன் கார்டுதாரர்கள் சிரமம் அடைந்துவருகின்றனர். பலர் ஆதார் அட்டைக்கான விவரங்களை பதிவு செய்யும் மையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

ஆதார் எண் பதிவதற்கு டிச. 30-ம் தேதி வரை கால அவகாசம் இருக்கும் நிலையில், பொதுவிநியோகத் துறையின் இந்த கெடுபிடியால் நுகர்வோர் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி ஆர்.ஜீவாவிடம் கேட்டபோது, “ஆதார் எண் பதியாவிட்டாலும் பொருட்கள் வழங்க சொல்லி உள்ளோம். பொருட்களை நிறுத்த சொல்லவில்லை” என்றார்.

16 ஊழியர்கள் ராஜினாமா

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, “ஆதார் எண் பதியாத கார்டுதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கக் கூடாது என அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். இதனால், பொதுமக்களை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகிறோம். கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் குறைவாக உள்ளன. குறிப்பாக கோதுமை, அரிசி, பாமாயில், பருப்பு வகைகள் 40 முதல் 60 சதவீதம் மட்டுமே விநியோகிக்கின்றனர். வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, தொழிலாளர் துறை என பல துறைகள் எங்களை ஆதிக்கம் செலுத்துவதால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்களை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். குறைந்த ஊதியம் பெற்றுவரும் நிலையில், அதிகாரிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. மனஉளைச்சல் காரணமாக கடந்த சில மாதங்களில் 16 பேர் வேலையை ராஜினாமா செய்துவிட்டனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x