Published : 11 Dec 2016 10:48 AM
Last Updated : 11 Dec 2016 10:48 AM
செட்டிவீதியில் வெள்ளச் சேதங்களை பார்வையிட்ட எம்.ஜி.ஆரி.டம் ஒட்டர்பாளையம் பகுதியில் நொய்யலில் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களையும் பார்வையிடுமாறு, அன்றைய சிங்காநல்லூர் அதிமுக முக்கிய நிர்வாகி வேண்டுகோள் வைத்தார்.
இதையடுத்து, ஒண்டிப்புதூர் ரயில்வே பள்ளம் மற்றும் நொய்யல் பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பார்வையிட எம்.ஜி.ஆர். சென்றார்.
பெரும் பாதிப்புக்கு உள்ளான நெசவாளர் காலனியின் அருகில் உள்ள, ஒண்டிப்புதூர் சுடுகாட்டின் அருகே தடுப்புச் சுவர் மற்றும் பாலம் கட்ட உத்தரவு பிறப்பித்தார். அதுதான், இப்போதும் நெசவாளர் காலனிக்குள் தண்ணீர் பாயாமல் தடுக்கும் அரணாக உள்ளது என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
நெசவாளர் காலனியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம்(65) கூறியது: அப்போது சிங்காநல்லூர் அரவான் திருவிழாவில் பங்கேற்பதற்காக, குடும்பத்துடன் சென்றுவிட்டோம். திரும்பிவரும்போது மழை தொடங்கியது. எங்கள் காலனியே வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. எங்கள் வீடு மேட்டுப்பகுதியில் இருந்ததால், வாயிலைத் தொட்டவாறு சென்றது வெள்ளம். மணல் மூட்டைகளை வாயிலில் வைத்து, வீட்டைப் பாதுகாத்தோம். அந்த வாரத்தில் 5 நாட்கள் இடைவெளியில் 2 முறையாக எங்கள் காலனியை வெள்ளம் சூழ்ந்தது. இரண்டாவது முறை எம்.ஜி.ஆர். வந்து பார்வையிட்டார்.
அப்போது காலனியில் 40 வீடுகளும், ஆரம்ப பள்ளிக் கூடமும்தான் இருந்தது. சுற்றிலும் கரும்பு, சோளக்காடுகள் இருந்தன. அதற்கு தெற்கே நொய்யல், மேற்கே ஒண்டிப்புதூர் பள்ளம் இருந்தன. சிறிதளவு மழை பெய்தாலே இப்பகுதி சேறும், சகதியுமாக மாறும். கனமழை என்றால் நிலைமையை மிகவும் மோசமாகிவிடும்.
பஞ்சத்தின்போது உதவிய மீன்கள்
சாதாரண காலங்களிலேயே எங்களுக்கு தினக் குளியல் நொய்யலில்தான். அதிலும், அமாவாசைக் குளியல் என்பது விஷேசம். அத்தனை பேர் வீட்டிலும் கத்தாழை முட்டி வைத்திருப்பர். மீன் பிடிக்கும் தூண்டிலும் நான்கைந்து இருக்கும். கத்தாழை முட்டியை கட்டிக்கொண்டு, நொய்யல் ஒட்டர்பாளையம் அணையில சிறுவர்கள் நீச்சல் பழகுவர். விடுமுறை நாட்களில் மீன் பிடிக்கச் செல்வர். பட்டைக் கெண்டை, கண்ணாடிக் கெண்டை, ஜிலேபி கெண்டை மீன்களை கிலோ கணக்கில் பிடித்துவந்து, சமைத்து சாப்பிடுவர்.
1972-ல் கைத்தறி நெசவாளர்கள் கடும் பஞ்சத்தில் சிக்கினர். அரசுக்கு எதிராகப் பட்டினிப் போராட்டம் நடத்தி, கஞ்சித் தொட்டிகளும் திறந்தனர். அப்போது, ஆற்றில் பிடித்த மீன்தான் பலருக்கு ஆகாரமாக இருந்தது. ஏறத்தாழ 40 ஆண்டுகளில் அந்த ஆறு சாக்கடையாகிவிட்டது. ஒட்டர்பாளையம் அணையில் ரசாயன, சாயக் கழிவுகளை திறந்து விடுகின்றனர். ஆற்றிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ள எங்க வீட்டிலேயே துர்நாற்றம்வீசுகிறது. அணைப் பகுதியில் சிறிது நேரம் நின்றுகொண்டிருந்தாலே, உடம்பெல்லாம் அரிக்கும். தொடர்ந்து, சொறி, சிரங்கு வரும் என்றார்.
தற்போதும் செல்வசிந்தாமணி குளத்தருகே செட்டி வீதி மற்றும் ஒண்டிப்புதூர் ரயில்வே பள்ளத்துக்கு குறுக்காக கட்டப்பட்ட பாலமும், சுற்றுச்சுவரும் எம்.ஜி.ஆரை நினைவுபடுத்துகின்றன. எம்.ஜி.ஆர் உத்தரவின்பேரில் கட்டப்பட்ட மதகு பராமரிப்பின்றிக் காணப்படுகிறது. இங்கு, குப்பை, கழிவுகள் குவிந்துள்ளன. மேலும், இப்பகுதியில் தற்போது பல்லாயிரக்கணக்கான வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்துவிட்டன.
கான்கிரீட் கட்டிடங்கள்
மதகுகளை ஒட்டி வரும் வாய்க்காலுக்கும், இருபுறம் பிரியும் சாலைக்கு குறுக்கிலும் இரண்டு பாலங்கள் மற்றும் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு உயரமான தடுப்புச் சுவர் எழுப்பட்டுள்ளது. அந்த தடுப்புச் சுவருக்கு தாழ்வாகவே குடியிருப்புகள் உள்ளன.
செல்வசிந்தாமணி குளத்திலிருந்து சில மீட்டர் தூரத்திலேயே நகரத்தின் முக்கிய பகுதியான டவுன்ஹால், உக்கடம் பகுதிகள் உள்ளன. அப்பகுதியில் எண்ணற்ற கான்கிரீட் கட்டிடங்கள் காணப்படுகின்றன.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் 40 கூரை வீடுகளே இருந்த ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனி மற்றும் சுற்றுவட்டாரத்தில், தற்போது கக்கன் நகர், கம்பன் நகர், எம்.ஜி.ஆர். நகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நகர், சேரன் நகர் என 50-க்கும் மேற்பட்ட காலனிகள் உருவாகியுள்ளன.
அதிக வெள்ளம் பாய்ந்த ஒண்டிப்புதூர் பள்ளம், ஆணைவாரிப் பள்ளம் ஆகியவை தற்போது நாணல் காடாக மாறிவிட்டன. நகரத்துச் சாக்கடை நீரே அவற்றில் செல்கிறது. ஒட்டர்பாளையத்தில் நொய்யல் ஆறா அல்லது கழிவு நீர் வாய்க்காலா என்று வேறுபாடுகாணமுடியாத அளவுக்கு, சாய, சாக்கடை, சலவைப் பட்டறை கழிவுகளால் நுப்பும் நுரையுமாக செல்கிறது.
இதுகுறித்து ஆளுங்கட்சியை சேர்ந்த, உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர் கூறும்போது, “1979-ல் ஏற்பட்டதைப்போல இப்போது நொய்யலில் வெள்ளம் வந்தால், கோவை நகரமே மிஞ்சாது. அப்போது சொற்பமான கூரை வீடுகளே இருந்தன. இப்போது 100 மடங்கு எண்ணிக்கையில், கான்கிரீட் அடுக்குமாடிக் குடியிருப்புகள் நிறைந்துள்ளன. கூரை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிடும். கான்கிரீட் வீடுகளில் வெள்ளம் தேங்கும். இவ்வாறு ஏராளமான வீடுகளில் அதிக அளவு தண்ணீர் தேங்கும்போது, மக்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்படும். அங்கு வசிப்போரை மீட்பதில் சிக்கல் ஏற்படும்.
சென்னை கடற்கரை நகரம். வெள்ளம் சீக்கிரம் வடிந்துவிடும். வெள்ளத்தின் வேகமும் குறைவாகவே இருக்கும். ஆனால், கோவை மலையும், குன்றுகளும், பள்ளங்களும் நிறைந்த பகுதி. நொய்யல், அதன் நீரோடைகள், வாய்க்கால்கள் எல்லாமே படிக்கட்டுகள் போல் குதித்துக்குதித்து கீழிறங்குபவை. நீர் குதித்தோடி வருவதால் வேகம் மிகுதியாக இருக்கும். இதனால், பாதிப்பு அதிகமாகும்.
பெருநகரமான சென்னையில் வெள்ளம் வந்தால், தீயணைப்பு வாகனங்கள், படகுகள் என மீட்டுப் பணிகள் போர்க்கால அடிப்படையில் இருக்கும். இங்கு அது நடக்குமா? அதனால் நொய்யல் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு திட்டக்குழு கூட்டங்களில் நான் பலமுறை வலியுறுத்தியுள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடருமானால், பெரும் வெள்ளம் வந்தால் கோவையே காணாமல்தான் போகும்” என்றார்.
அவர் சொல்வது எந்த அளவுக்கு உண்மை? கோவை வெள்ளம்போல 31 ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 நவம்பரில் திருப்பூர் மக்கள் வெள்ளத்தில் சிக்கினர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT