Last Updated : 27 Nov, 2022 06:36 PM

2  

Published : 27 Nov 2022 06:36 PM
Last Updated : 27 Nov 2022 06:36 PM

பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம் - புதுச்சேரி ஆதிதிராவிடர் விடுதிகளில் பயிலும் மாணவர்கள் வேதனை

ஆதிதிராவிடர் மாணவர் விடுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் பயிலும் விடுதிகளில் ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்காக புதுச்சேரியில் 16, காரைக்காலில் 10, ஏனாமில் 2 என மொத்தம் 28 விடுதிகள் உள்ளன. ஏழ்மை நிலையிலுள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் இந்த விடுதிகளில் தங்கி கல்வி பயில்கின்றனர். ஆனால், விடுதிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி சரியாக செலவிடப்படாததால் அவை மோசமாக இயங்கி வருவதாக மாணவ, மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர். விடுதியில் வழங்கப்பட்டு வந்த அசைவ உணவுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், முட்டை கூட தரப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதோடு, கிருஷ்ணா நகரில் உள்ள மாணவிகளுக்கான விடுதியில் இருந்து 2 கிமீ தொலைவில் பேருந்து நிலையம் உள்ளதால் அவர்களுக்கு வழங்குவதற்காக நூற்றுக்கணக்கில் சைக்கிள்கள் அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளன. எனினும், இதுவரை யாருக்கும் சைக்கிள் தரப்படவில்லை என்றும், பூட்டி வைக்கப்பட்ட சைக்கிள்கள் வீணாகி வருவதாகவும் மாணவிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தாகூர் கலைக்கல்லூரி அருகே உள்ள விடுதி பழுதடைந்ததை அடுத்து அதனை சீரமைக்க ரூ. 40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் பணிகள் தொடங்கப்படாததால் கொசப்பாளையம் வரை வந்து செல்ல வேண்டிய சூழலில் மாணவர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தட்டாஞ்சாவடியிலுள்ள விடுதியில் கட்டிடம் விரிசல் அடைந்துள்ளதாக அதிகாரிகளிடம் மாணவர்கள் தரப்பில் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் சரவணன் கூறுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்து மாணவர்களுக்கும் எந்த தனியார் நிறுவனத்தில் பிடித்தாலும் அதற்கான முழு செலவினை அரசே ஏற்கும் என்று என்.ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு சொல்கிறது. ஆனால், ஏழை ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் மீது ஒரு துளி கூட அக்கறை இல்லாத அரசாக தான் உள்ளது. புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக அசைவ உணவு நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு திங்கட்கிழமைகளில் முட்டையும், புதன் கிழமையில் ஆட்டுக்கறியும், வியாழக்கிழமை மீனும், சனிக்கிழமை கோழிக்கறியும் மாணவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டு காலமாக ஒரு முட்டை கூட வழங்கப்படுவதில்லை.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலர் சரவணன்.

நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களிடையே (11-19 வயது வரை) 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் இரத்தச் சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 சதவீதம் தாய்மார்களும், பெண்களும் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் மூவர் இரத்தச் சோகையுடனே வளர்கின்றனர் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. இப்படிப்பட்ட நிலையில் விடுதியில் தங்கும் ஏழை ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் அசைவ உணவு, அரசு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. அதில் எந்த முறைகேடும் நடைபெறாத நிலையில், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அதில் முறையீடு புகார் எழுந்தது. இதனால், யாரிடம் டெண்டர் விடுவது என்பதில்தான் பிரச்சனை உள்ளது என்று மாநில நிர்வாகம் கூறியுள்ளது. மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கழிவறைகள் மோசமான நிலையில் உள்ளன. பல இடங்களில் தாழ்ப்பாள் கிடையாது. கடந்த மூன்று ஆண்டு காலமாக அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய இலவச பாய், தலையணை வழங்கப்படவில்லை. முதலில் ஊட்டச்சத்து உணவை தரக்கோரி பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x