Published : 01 Dec 2016 10:12 AM
Last Updated : 01 Dec 2016 10:12 AM

திருச்சி அருகே வெடிமருந்து ஆலை வெடித்துச் சிதறி விபத்து: 10 பேர் பலியானதாக அச்சம்

திருச்சி அருகே துறையூர் பகுதியில் உள்ள வெடிமருந்து ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி மாவட்டம் - துறையூர் பகுதியின் தி.முருங்கப்பட்டி என்ற இடத்தில் 'வெற்றிவேல் எக்ஸ்போஸிவ்' என்ற பெயரில் தனியார் வெடிமருந்து தொழிற்சாலை இயங்கி வருகிறது. மலைகள், பாறைகளைத் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிகள் உள்ளிட்டவை இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 100 ஏக்கர் பரப்பில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் ஏழு ஆலைகள் இயங்கி வருகின்றன. ஓர் ஆலையில் 4 பேர் பணிபுரிவார்கள். எந்நேரமும் சுமார் 10 பேர் பணிநிமித்தமாக புழங்குவர்.

இந்த நிலையில், நேற்று இரவு இரவுப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பணி நேரம் முடியும் தருவாயில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் ஓர் ஆலையில் பயங்கர வெடிச்சத்தத்துடன் புகைமூட்டம் எழுந்துள்ளது.

விபத்து ஏற்பட்டு வெடித்துச் சிதறிய அந்த ஆலை தரைமட்டமானது. அங்கிருந்த இடிபாடுகளில் புதைந்த மூவரின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விபத்து ஏற்பட்ட ஆலை வெடித்துச் சிதறியபோது, அப்பகுதியைச் சுற்றிலும் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிர்வலைகள் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

திருச்சியில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் பயண தூரம் என்பதால் சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் வருவதற்கு சற்றே தாமதம் ஏற்பட்டது. மேலும், மழை காரணமாகவும் மீட்புப் பணி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கையை திருச்சி கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, எஸ்.பி. செந்தில்குமார் பார்வையிட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் கொந்தளிப்பு

விபத்து ஏற்பட்ட தனியார் வெடிமருந்து ஆலையை அகற்றக் கோரி நீண்ட காலமாகவே அப்பகுதி மக்கள் மனுக்கள் அளித்து கோரிக்கை விடுத்து வந்திருக்கின்றனர். ஆனால், தங்களது கோரிக்கைகளை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை என்று அந்த மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், விபத்து ஏற்பட்டவுடன் ஆலையின் முன்பு திரண்ட பொதுமக்களும், தொழிலாளர்களின் உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x