Published : 27 Nov 2022 05:08 AM
Last Updated : 27 Nov 2022 05:08 AM

அரசமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து நாட்டை முன்னேற்ற உறுதியேற்போம் - அரசியலமைப்பு நாளையொட்டி ஆளுநர், முதல்வர் வாழ்த்து

சென்னை: அரசியலமைப்பு நாளையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் அரசியலமைப்புச் சட்ட நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

ஆளுநர் ஆர்.என்.ரவி: அரசியலமைப்பு நாளில், மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்வோம். இதன்மூலம் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தேசத்தின் உறுதியை மேலும் வலுப்படுத்துவோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து, அதனை வடித்துத் தந்த சட்டமேதை அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசியலமைப்பு நாளில் உறுதிகொள்வோம்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: உலகின் மிகப்பெரிய சட்டமான இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டநாளில், அதன் பாதுகாவலராகிய நமக்கு, சட்டக் கூறுகளை பாதுகாப்பதற்கான பொறுப்பு இருக்கிறது என வலியுறுத்துகிறேன்.

விசிக தலைவர் திருமாவளவன்: நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை நீர்த்து போகாமல் பாதுகாத்திடவும் சட்டமேதை அம்பேத்கரின் கனவுகளை நனவாக்கும் வகையில் பிறப்பு அடிப்படையிலான உயர்வு, தாழ்வு என்னும் சனாதன பாகுபாடுகள் இல்லாத ஒரு புதிய ஜனநாயக இந்தியாவை கட்டமைத்திட உளப்பூர்வமாக உறுதியேற்போம்.

மக்கள் நீதி மய்யம்: மாநில உரிமைகள், சமூக நீதி, கருத்துச் சுதந்திரம், சகோதரத்துவம் என அனைத்தையும் அசைத்துப் பார்க்கும் அதிகார கும்பலிடமிருந்து அரசியலமைப்பை பாதுகாக்கும் பொறுப்பு நமக்குண்டு. அது சிதைந்துவிடாமல் தடுப்போம் என உறுதியேற்போம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x