Last Updated : 27 Nov, 2022 04:25 AM

 

Published : 27 Nov 2022 04:25 AM
Last Updated : 27 Nov 2022 04:25 AM

கிருஷ்ணகிரி நகர அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் நிறுத்தம்: தொடர்ந்து செயல்பட மக்கள் வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி நகரில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சில சிகிச்சைகள் நிறுத்தப்பட்டதால், நுழைவு வாயில் பூட்டப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி நகரில் செயல்படும் அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் நிறுத்தப் பட்டுள்ளதால், புறநோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி நகரில் காந்தி ரோடு சாலையில் அரசு தலைமை மருத்துவமனை கடந்த 1954-ம் ஆண்டு 422 படுக்கை வசதிகளுடன் செயல்பட தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள சுமார் 20 லட்சம் மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வசதியாக, கடந்த 2019-ம் ஆண்டு முதல் 700 படுக்கை வசதி கொண்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

மேலும், இங்கு தலைமை மருத்துவமனையாக இருந்த போது தினசரி 1,200 வெளி நோயாளிகளும், 400 உள்நோயாளிகளும் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையாக மாற்றிய பின், 1,600 முதல் 1,800 வெளிநோயாளிகளும், 600-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் மருத்துவ சிகிச்சை பெற்றனர். மேலும், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகளுக்கு மாத்திரை, மருந்துகள் இங்கேயே வழங்கப்பட்டு வந்தன. இதனால் கிருஷ்ணகிரி நகர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெற்று வந்தனர்.

நுழைவுவாயில் பூட்டப்பட்டது: இந்நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கடந்த அக்.15-ம் தேதி முதல் போலுப்பள்ளியில் செயல்பட தொடங்கியது. இதனால் நகரில் செயல்பட்டு வந்த மருத்துவமனையில் சிகிச்சைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. நேற்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பூட்டப்பட்டு பேரிகார்டு வைக்கப்பட்டது.

இனி எந்த சிகிச்சையாக இருந்தாலும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என சிகிச்சைக்கு வந்த வெளிநோயாளிகளை திருப்பி அனுப்பினர். இதனால் மருத்துவமனைக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அதே வேளையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தற்போது நாள்தோறும் 500 வெளிநோயாளிகள் மட்டும் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில வாரங்களாகவே, இங்கு சிகிச்சை அளிப்பதில்லை. மருத்துவர்களும் இருப்பதில்லை. கிருஷ்ணகிரி நகரில் இருந்து போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அவசர சிகிச்சைக்கு வருபவர்களும், சி.டி.ஸ்கேன் உள்ளிட்டவைக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது, சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. சிறிய நோய்களுக்கு சிகிச்சை பெற நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளதால் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகிறோம்.

எனவே, நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் புறநோயாளி சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை குறைந்த அளவிலான மருத்துவர்களுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தரப்பில் கேட்டபோது, தற்போது நகரில் உள்ள மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் தாய் சேய் நல சிகிச்சை பிரிவு 300 படுக்கை வசதிகளுடன் தொடர்ந்து செயல்படும். விரைவில் குறைந்தபட்ச வசதிகளுடன் அரசு மருத்துவமனையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x