Published : 18 Dec 2016 02:42 PM
Last Updated : 18 Dec 2016 02:42 PM
``இன்னும் கொஞ்ச நேரந் தாமுடே… அங்கன களியக்காவிளையைத் தாண்டிட்டா கேரள எல்லைக்குள்ள போயிரலாம்லே… அப்புறம் பயமில்ல மக்கா” என, கிளீனரிடம் பேசிக் கொண்டே தமிழக ரேஷன் அரிசி, மண்ணெண்ணெயுடன், கேரளத்தை நோக்கி வேகமெடுக்கும் ஓட்டுநர்கள் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
தமிழக எல்லையைக் கடக்கும் வரை மட்டுமே பதற்றத்துடன் பயணிக்கும் இவர்கள், கேரள எல்லைக்குள் நுழைந்ததும் அம்மாநில போலீஸாரின் பாதுகாப்புக்கு உள்ளாவது வேடிக்கை. அதற்கு வலுவான காரணங்களும் இல்லாமல் இல்லை. அதன் பின்னணியை முழுமையாக விவரித்தால் மட்டுமே கடத்தல் தொழிலின் ஆழம் புரியும்.
கேரள நெல் சாகுபடி
கேரள மாநிலத்தில் கடந்த 1970-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்தம் 8 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்று வந்தது. 2014-ம் ஆண்டு கேரள மாநில வேளாண்மைத் துறை புள்ளி விபரங்களின்படி இருபோகமும் சேர்த்து 2 லட்சம் ஹெக்டேர் பரப்பிலேயே நெல் சாகுபடி நடைபெற்றது. இதன் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் டன் வரை மட்டுமே கேரளத்துக்கு அரிசி கிடைக்கும். ஆனால், கேரளத்தின் மக்கள் தொகை 3 கோடி. அவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு 40 லட்சம் டன் அரிசி தேவை.
உற்பத்தி போக கூடுதலாக தேவைப்படும் அரிசி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்கம் மாநிலங்களில் இருந்து பெறப்படுகிறது. அரிசி உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளியே, ரேஷன் அரிசி கடத்தல் மாபியாக்களின் சாம்ராஜ்யத்தை கேரளம் நோக்கி நகர்த்தியுள்ளது.
சிக்குவது தமிழகம்
ரேஷன் பொருட்கள் கடத்தலில் இருவகை உண்டு. அதில் முக்கியமானது, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்ய வேண்டிய அரிசி மூட்டைகள், சிவில் சப்ளை குடோன்களில் இருந்தே நேரடியாக லாரிகளில் கடத்தப்படுவது. இவ்வகையான கடத்தலில் லாரி டிரான்ஸ்போர்ட் கான்ட்ராக்டர்கள் தொடங்கி, துறை அதிகாரிகள் வரை பலரின் தலையீடு இருக்கும். தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடியில் நடப்பது இந்த வகை கடத்தல் அல்ல. அதே நேரத்தில் இதற்கு இணையான மதிப்பில் சொல்லும் அளவுக்கு உள்ளது இங்குள்ள சில்லறைக் கடத்தலின் வீரியம்.
32 சோதனைச் சாவடிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரள எல்லைக்குள் நுழைய படந்தாலுமூடு, கோழிவிளை, கண்ணமாமூடு, சிறிய கொல்லை, நெட்டா உள்ளிட்ட 32 வழித்தடங்கள் உள்ளன. இதன் வழியாக கடத்தல் தொழில் செய்பவர்கள் புகுந்து புறப்படவே, இந்த 32 இடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளது கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை. இங்கெல்லாம், கடத்தல்காரர்கள் அடிக்கடி பிடிபட்டாலும் பல்வேறு வழிகளில் கடத்தல் தொழில் அரங்கேறியே வருகிறது.
சின்னக் கணக்கு.. பெரிய பாடம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 171 பகுதி நேர கடைகள் உட்பட மொத்தமாக 757 ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 5,60,000 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 10,803 டன் ரேஷன் அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதில் 96 சதவீதம் அரிசி பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளில் அரிசியை பாலிஷ் செய்யும் ஆலைகள் மற்றும் குடோன்கள், இதை மையமாக வைத்தே இயங்கி வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் ரேஷன் அரிசியை வாங்கினாலும், அதை சாப்பிட பயன்படுத்துவதில்லை என்பதை இனி வரும் கணக்கே உணர்த்தும்.
226 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை வருவாய்த் துறையின் பறக்கும் படை அதிகாரிகளால் 60 டன்னுக்கும் மேல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் காவல் துறையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் நடப்பு ஆண்டில் நவம்பர் 30-ம் தேதி வரை 46 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஒவ்வொரு முறையும் கடத்தப்பட்ட பொருளும், வாகனமும் மட்டுமே சிக்குவதும், கடத்திய நபர் தப்பியோடி விடுவதும் தொடர் கதையாக இருப்பதும் இதில் கவனிக்க வேண்டிய நிகழ்வாக உருப்பெற்று நிற்கிறது.
மீனவ கிராமங்களிலும்..
தமிழகத்தில் விநியோகிக்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய்க்கு கேரளாவில் ஒரு லிட்டருக்கு 90 ரூபாய் விலை கிடைக்கிறது. தமிழகத்தில் விநியோகிக்கப்படும் விலையில்லா அரிசி கேரளாவில் 21 ரூபாய் வரை விலை போகிறது. குமரி மாவட்ட சில மீனவ கிராமங்களில் அதிக அளவில் மண்ணெண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தரை வழிப் போக்குவரத்தில்தான் சோதனை என்பதால், மானிய விலை மண்ணெண்ணெய் படகுகளில் கேரளாவுக்கு கொண்டு சென்று விற்கப்படுகிறது.
மண்ணெண்ணெய் புரோக்கர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்ணெண்ணெய் வழங்கும் புரோக்கர்கள் புற்றீசல் போல் முளைத்துள்ளனர். கடல் சூழல், நீரின் போக்கு என பதற்றமான மனநிலையோடு மீன் பிடிப்பவர்கள் கரைக்கு வந்தால் தான் நிஜம் என்னும் நிலையில், மீனவர்களின் வல்லம், படகுகளின் இன்ஜின்களுக்கு மண்ணெண்ணெய் சப்ளை செய்யும் புரோக்கர்களோ லட்சங்களில் மிதக்கின்றனர். கடல் தொழிலுக்கு செல்லாதவர்களிடம் உள்ள மண்ணெண்ணெயை கொள்முதல் செய்வதே இவர்களது வேலை. 250 லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 1,500 ரூபாய் கமிஷன்.
அரிசி பயன்பாடு குறைவு
கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த பல கிராமங்களில் ஏறக்குறைய கேரளாவின் கலாச்சாரத்தை ஒட்டிய வாழ்க்கை முறை நடைபெறுகிறது. கேரளாவைப் போலவே பெரிய மோட்டா ரக அரிசியையே சாப்பிடுகின்றனர். இதனால் இங்கு செல்லும் ரேஷன் அரிசியும் கணிசமாக புரோக்கர்களின் கைக்கு சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில ஏஜென்ட்கள் மொத்தமாக ரேஷன் கார்டுகளை கைவசம் வைத்து கொண்டு, அவர்களே கடைகளுக்கு சென்று அரிசியை பெற்றுச் செல்கின்றனர்.
தமிழக எல்லைப் பகுதியான களியக்காவிளையை கடந்ததும், கேரள எல்லையோரப் பகுதிகளில் ஏராளமான அரிசி குடோன்கள் இருக்கின்றன. இவை கேரள முதலாளிகளால் நடத்தப்படுபவை. சோதனைச் சாவடியில் இருக்கும் போலீஸாரை கவனித்து விட்டோ, அல்லது அவர்களின் கண்களில் சிக்காமலே இந்த குடோன்களுக்குள் நுழைந்து விட்டால் போதும். அடுத்த சில நிமிடங்களில் அரிசி விற்ற காசு கைக்கு சேர்ந்து விடும்.
கேரள அரசு பேருந்துகள்
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் பயணிகள் ரயிலின் கழிவறைகளில் கூட ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தப்படுகிறது. கேரள அரசு பேருந்துகளிலும் இருக்கைக்கு அடியில் வைத்து ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. தங்கள் மாநிலத்துக்கு தான் செல்கிறது என்பதால், கேரள ஓட்டுநர், நடத்துனர்கள் இதைக் கண்டுகொள்வதும் இல்லை. அதிகாரிகள் ஆய்வின் போது இவை கண்டு பிடிக்கப்பட்டாலும் கூட பெரும்பாலும் குற்றவாளிகள் சிக்குவதில்லை. பேருந்திலேயே அவர்கள் இருந்தாலும் அரிசி மூட்டைக்கு உரிமை கோருவதில்லை. கேட்பாரற்று கிடந்த அரிசி மூட்டை மீட்கப்பட்டதாகவே குற்ற ஆவணங்களில் பதிவாகிறது.
வழக்குகளும் பாய்கிறது
கடந்த 2012-ம் ஆண்டு 57,944 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசியும் 1,87,288 லிட்டர் மண்ணெண்ணெயும் கடத்தல் காரர்களிடம் இருந்து தமிழகத்தில் கைப்பற்றப்பட்டது. 4,910 நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2,246 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் 196 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2013ம் ஆண்டு மதுரை மண்டலத்தில் உணவு பொருள் கடத்தியதாக 5,033 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 2,948 ஆகும். 59 பேர் கள்ளச் சந்தை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 388 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் குமரி மாவட்டத்தில் கடந்த 2013ம் வருடம் மட்டும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் 460 வழக்குகள் பதிவாகின. இவற்றில் ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகள் எண்ணிக்கை 225. இதில் 16 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வகையில், 2011 முதல் 2015 வரை தமிழகத்தில், 694 பேர் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
அதே இலக்கோடு நடப்பாண்டிலும் பயணித்துக் கொண்டிருப்பது வேதனை என்றாலும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகளின் கடும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியே பிடிபட்ட பொருட்களின் மதிப்பும், பிடிபட்டவர்களின் எண்ணிக்கையும்.
அதே நேரத்தில் தமிழக ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கொண்டு வந்த போது பிடித்ததாகவோ, அல்லது அரிசி பறிமுதல் செய்யப்பட்டதாகவோ கேரள காவல்துறையில் எந்த புள்ளி விபரங்களும் இல்லை. என்ன தான் கடத்தல் தொழிலுக்கு தமிழக போலீஸாரும், பறக்கும் படை அதிகாரிகளும் கிடுக்குப்பிடி போட்டாலும், கேரள போலீஸார் வெண்சாமரம் வீசும் வரை கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க முடியாது என்பதே முகத்தில் அறையும் உண்மை.
பிரச்சினை தமிழகத்தில்
அரிசியைப் பொறுத்தவரை மோட்டா ரகம், சன்ன ரகம், மிக சன்னரகம் என மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது. இதில் மோட்டா ரகம் சற்று பெரியதாக இருக்கும். இதை கேரள மக்கள் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
எனினும், சன்ன ரக (மத்திய ரகம்) அரிசி தான் தமிழக ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக சி.ஆர். 1009, ஆடுதுறை 36, ஆடுதுறை 45, ஆடுதுறை 46, சிஒ6 ஆகிய சன்ன ரக அரிசியே அதிக அளவில் விநியோகிக்கப்படுகிறது. இந்த ரகங்கள் டெல்டா மாவட்டங்களில் அதிகம் சாகுபடியாகின்றன. அதுபோக கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், தமிழக பொது விநியோகத் திட்டத்துக்கு அரிசி வாங்கப்படுகிறது.
விவசாயிகள் நெல்லை அறுவடை செய்ததும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அவை கொள்முதல் செய்யப்பட்டு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசு நிர்ணயித்த விலையை கணக்கில் கொண்டு விவசாயிக்கு கிலோ 14 முதல் 16 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இந்த நடைமுறைகளை எல்லாம் கடந்து தான், ரேஷன் கடைக்கு அரிசி வந்து சேர்கிறது.
பலரும் மாதந்தோறும் 20 கிலோ அரிசி வாங்குவதில்லை. அதுபோல், அரிசி வாங்குபவர்களுக்கும் ஒரே நேரத்தில் 20 கிலோ வழங்கப்படுவதில்லை. இவ்வாறு மீதமாகும் அரிசி, ரேஷன் கடை ஊழியர்களின் ஒத்துழைப்புடன் விற்கப்படுகிறது. இதுபோக, கடைகளுக்கு வரும் அரிசியில் பாதிக்கு மேல் வியாபாரிகளுக்கு கைமாறுகிறது. கடத்தல் என்னவோ கேரளத்துக்கு தான் என்றாலும், அதற்கு துணை போவது தமிழர்கள் அல்லவா?
சுற்றுலா, பள்ளி வாகனங்கள்
கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் கூறியதாவது:
காய்கறி லோடு, செங்கல் லோடு போன்றவற்றுக்கு நடுவே மறைத்து வைத்து அரிசியை கடத்துவது எல்லாம் பழைய நடைமுறை. கன்னியாகுமரி இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருபவர்கள் நிச்சயமாக கேரளாவையும் சுற்றிப் பார்ப்பார்கள். இதனால் சுற்றுலா வாகனங்கள்திருவனந்தபுரம் வழித்தடத்தில் அடிக்கடி பயணிக்கும். இதை சாதகமாக பயன்படுத்தி இப்போது சுற்றுலா வாகனங்களில் அரிசியை கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
சுற்றுலா பேருந்தின் கண்ணாடிகளுக்கு பக்கத்தில் இருக்கும் ஸ்கிரீனை மூடி விடுகிறார்கள். உள்ளே இருக்கும் டேப்பில் பாடலின் ஒலியை கூட்டி வைத்து விட்டால் பார்ப்பவர்களுக்கு அக்மார்க் டூரீஸ்ட் வாகனமாகவே தெரியும். இன்னும் சிலர் வெளி மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு பள்ளியின் பெயரை வாகனத்தின் முன்பு பேனராக கட்டி வைத்து விடுகின்றனர்” என திகில் கிளப்புகிறார்.
மண்ணெண்ணெய் கடத்தலும் மீனவர்களும்
மீனவ கிராமங்களில் மண்ணெண்ணெய் கடத்தல் அதிக அளவில் நடைபெறுவது குறித்து, வழக்கறிஞர் திருத்தமிழ் தேவனார் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 42 கடலோர கிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மீன் பிடிப்பதற்கு லம்பாடி இன்ஜினை பயன்படுத்துபவர்கள் டீஸலையும், யமஹா, சுசுகி இன்ஜினை பயன்படுத்தும் மீனவர்கள் மண்ணெண்ணெயையும் உபயோகிக்கின்றனர்.
மீனவர்களுக்கு தமிழக அரசு மானிய விலையில் 200 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கி வருகிறது. ஆனால், மாதத்தில் 20 நாட்கள் வரை கடல் தொழிலுக்கு செல்லும் மீனவர்களுக்கு இது போதுமானதாக இருப்பதில்லை. மீனவர்களின் படகுகளின் இயக்க காலத்தை கணக்கிட்டு கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்தும், கடல் தொழிலுக்கு செல்லாதோரை இனம் கண்டு அவர்களுக்கு விநியோகத்தை நிறுத்தி விட்டு, தகுதியானோருக்கு கூடுதலாக வழங்கவும் செய்தால் மீனவ கிராமங்களில் மண்ணெண்ணெய் கடத்தல் கட்டுக்குள் வரும். மீன் பிடித் தொழிலுக்கு செல்லாதவர்களிடம் உள்ள மண்ணெண்ணெய்தான் தேவைப்படு பவர்களுக்கு கடத்தப்படுகிறது” என்றார்.
பணப் பயிரிடம் தோற்றது நெற்பயிர்
கேரளத்தில் நெல் உற்பத்தியை அதிகரிக்க அம்மாநில அரசும் முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்திய அளவிலேயே நெல்லுக்கு கூடுதல் விலை கேரளாவில்தான் வழங்கப்படுகிறது. நீண்ட காலமாக தரிசாக கிடக்கும் நிலங்களில் மீண்டும் நெல் சாகுபடி செய்தால் ஊக்கத் தொகையும் கேரள அரசால் வழங்கப்படுகிறது. இப்படி பல கட்ட முயற்சிகள் நடந்தும் கேரளத்தில் நெல் சாகுபடி திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.
கேரள விவசாயிகள் ரப்பர், ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு, வாழை, கமுகு, தென்னை என பணப்பயிர் சாகுபடியில்தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதுவே, பிற மாநிலங்களில் இருந்து அரிசி வாங்க வேண்டிய கட்டாயத்தை பல ஆண்டுகளாக உருவாக்குகிறது.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு செல்ல 32 வழித்தடங்கள் உள்ளன. இந்த 32 இடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளது குமரி மாவட்ட காவல் துறை. |
தமிழக மானிய விலை மண்ணெண்ணெய் லிட்டருக்கு கேரளாவில் 90 ரூபாய் விலை கிடைக்கிறது. தமிழக விலையில்லா அரிசி கேரளாவில் 21 ரூபாய் வரை விலை போகிறது. |
கேரளத்தில் உற்பத்தியாவது 6 லட்சம் டன் அரிசி மட்டுமே. ஆனால், கேரளத்தின் 3 கோடி மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு 40 லட்சம் டன் அரிசி தேவை. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT