Last Updated : 26 Nov, 2022 11:47 PM

5  

Published : 26 Nov 2022 11:47 PM
Last Updated : 26 Nov 2022 11:47 PM

டிஜிட்டல் ரீசர்வே மூலம் தமிழர்களின் வீடுகளை அகற்றும் நடவடிக்கையை தொடங்கிய கேரளா - தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சி

மூணாறு இக்கா நகரில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

போடி: மூணாறில் ஏராளமான வணிக ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இருந்து வரும் நிலையில் டிஜிட்டல் ரீசர்வே என்ற பெயரில் தமிழர்களின் குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கையை கேரள அரசு தொடங்கி உள்ளது. இது இரு மாநில தமிழர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் கடந்த 1-ம் தேதி முதல் டிஜிட்டல் ரீ சர்வேயை அம்மாநில அரசு தொடங்கி உள்ளது. மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போதே மாநில எல்லைகள் சரியாக பிரிக்கப்படவில்லை. இந்நிலையில் கேரளாவின் தன்னிச்சையான இப்போக்கினால் தமிழக எல்லையில் உள்ள ஏராளமான நிலங்கள் பறிபோகும் நிலை உள்ளது என்று விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மூணாறில் இருந்து மாட்டுப்பட்டி செல்லும் வழியில் உள்ள இக்காநகரில் உள்ள 60 தமிழர்களின் குடியிருப்புகளுக்கு வீட்டை காலி செய்ய வேண்டும் என்று தேவிகுளம் வருவாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். 29-ம் தேதி வீடுகளை அகற்றும் பணிக்காக போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் ரீசர்வே என்கிற பெயரில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கேரள அரசு நடத்தும் முதல் தாக்குதல் இந்த இக்கா நகரில் தொடங்கி இருப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் கூறுகையில், "மூணாறில் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டடங்கள் ஏராளமாக உள்ளன. இதில் தமிழர்கள் வாழும் ஒரு குடியிருப்பு பகுதியை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்புவாசிகள் மூணாறு பஞ்சாயத்துக்கு முறையாக வரி செலுத்துகிறார்கள். மின் இணைப்பும் முறைப்படி கொடுக்கப்பட்டிருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் எந்த அடிப்படையில் பத்து நாட்கள் அவகாசத்தில், வீடுகளை கேரள வருவாய்த்துறையால் இடிக்க முடியும்.

மூணாறில் உள்ள மலையாளிகளின் ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு நோட்டீஸ் கொடுக்காமல் தமிழர்களின் குடியிருப்புகளை அகற்ற நினைப்பது சட்டவிரோதம் ஆகும். கேரள வருவாய்த்துறை இக்கா நகரை இடிக்கப் போகிறோம் என்கிற தன்னுடைய உத்தரவை திரும்ப பெற வேண்டும். அவர்களுக்கு கேரள நகர்ப்புற வளர்ச்சி வாரியத்தின் மூலம் வீடுகளை கட்டிக் கொடுத்த பிறகே, இக்கா நகரை அரசு தன்வசம் கொண்டுவர வேண்டும். தேவையின்றி உழைக்கும் மக்கள் மீது திட்டமிட்டு கை வைக்க நினைத்தால், அதற்கு பெயர் அரசு நடவடிக்கை அல்ல, இனவெறி என்பதை கேரள அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். தேவிகுளம் பீர்மேடு உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களில் வாழும் ஆறரை லட்சம் தமிழர்களுக்கும் விடப்பட்ட முதல் சவால் இந்த இக்கா நகர் மீதான நடவடிக்கை" இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x